தேர்தல் முடிவு சர்வதேச சமூகத்திற்கு ஓர் முக்கிய செய்தி: ஜனாதிபதி

அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோ ருக்கும், சர்வதேச சமூகத்தினருக்கும் தென்பகுதி மக்கள் இத்தேர்தல் முடிவு மூலம் முக்கிய செய்தியொன்றை வழங்கியுள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெற்றிருப்பதையொட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

தாய்நாட்டின் மீது அன்பு கொண்டிருக்கும் மக்களுக்குக் கிடைத்திருக்கும் பாரிய வெற்றியாகவே தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ள அமோக வெற்றியைக் கருதுகின்றேன்.

2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்காகத் தென் மாகாண மக்கள் பாரிய பங்களிப்பு செய்தார்கள். இந்த மாகாண சபைத் தேர்தலிலும் ஐ.ம.சு. முன்னணி மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றிபெறப் பங்களிப்பு செய்திருப்பதன் மூலம் எமது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள். இத்தேர்தல் முடிவை தென் மாகாண மக்கள் மஹிந்த சிந்தனைக்கு அளித்திருக்கும் மீள் அங்கீகாரமாகவே நான் கருதுகின்றேன்.

அரசாங்கத்திற்கு எதிராகப் பிழையான அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்புவதற்காகச் செயற்படுவோக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும் இத்தேர்தல் முடிவின் ஊடாக முக்கியமான செய்தியொன்றை தென் மாகாண மக்கள் வழங்கியுள்ளார்கள்.

நாட்டைப் பாதுகாத்து மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான எங்களது திட்டங்களை மேலும் வலுவான முறையில் முன்னெடுக்க இந்த மக்கள் ஆணை உந்து சக்தியாக அமையும். கெளரவமான நாட்டைக் கட்டியெழுப்பும் எமது உன்னத முயற்சியில் இணைந்து கொள்ளுமாறு சகலருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றேன்.

 அரசியல், இன, மத சக்திகளுக்கு உட்படாமல் நாட்டின் சுபீட்சத்திற்காக ஒன்றுபட்ட தென் மாகாண மக்களை நான் இருதயபூர்வமாக நினைவு கூருகிறேன். அதேநேரம், அமைதியாகத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையாளர் உட்பட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் உட்பட பொறுப்புடன் செயற்பட்ட நிறுவனங்களுக்கும் இச்சந்தப்பத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் இவ்வாறு ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply