வடக்கு- கிழக்கிலும் களைகட்டும் தீபாவளி பண்டிகை
தீபாவளி கொண்டாட்டங்களில் இம்முறை யாழ்ப்பாணத்தில் மக்கள் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக யாழ்ப்பாணம் நகரப் பகுதி, பருத்தித்துறை கரவெட்டி, சாவகச்சேரி, மானிப்பாய, சுண்ணாகம் உட்பட பல இடங்களிலும் நடைபாதை வியாபாரிகளின் விற்பனை நிலையங்கள் நிறைந்து காணப்படுவதுடன், பொது மக்கள் வர்த்தக நிலையங்களிலும் அதிகளவில் துணி வகைகளை கொள்வனவு செய்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த பல வருடங்களாக குடாநாட்டிலும் மற்றும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணப்பட்ட மோதல் காரணமாக தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்கள் கடந்த காலங்களில் பெருமளவில் களைகட்டாத நிலை காணப்பட்டது . ஆனாலும் இவ்வாண்டு மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து பொது மக்கள அதிக ஆர்வத்துடன் தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்திற்காக புதுப் புடவைகள் கொள்வனவு செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்திலும் மக்கள் தீபாவளி பண்டிகைக்காக புது ஆடைகளை கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு வவுனியாவில் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.
நகரப்பகுதிக்கு மக்கள் அதிக அளவில் வருகை தந்து தமக்குத் தேவையான புத்தாடைகள், உணவுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்கு வந்ததையடுத்து வந்துள்ள முதலாவது தீபாவளிப் பண்டிகை இது என்பது குறி்ப்பிடத்தக்கது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வியாபார நடவடிக்கைகள் பலமடங்கு இம்முறை அதிகரித்திருப்பதைக் காண முடிகின்றது.
மோதல்கள், குண்டுவெடிப்புகள், உயிராபத்துக்கான சூழ்நிலைகள் என்பவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும், தற்போது நிலவுகின்ற அமைதிச் சூழ்நிலை காரணமாகவும் இம்முறை தீபாவளி களைகட்டியிருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
எனினும் முகாம்களில் இருக்கின்ற பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களுக்குச் செல்லாத நிலையில் இந்தத்தீபாவளி அதிக மகிழ்ச்சியைக் கொடுப்பதாக அமையவில்லை என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply