இலங்கை அரசு தனது உறுதியை மீறியுள்ளது : மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஒரு லட்சம் இடம்பெயர்ந்தவர்களை மாத்திரமே இந்த ஆண்டில் மீள் குடியேற்றும் நோக்கம் இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளதன் மூலம் அரசாங்கம் தமது உறுதியளிப்பை மீறி உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 80 சதவீதமான இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும் தற்போது ஒரு லட்சம் பேரை மாத்திரம் குடியேற்றுவது நியாயமற்றது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் நிறைவடைந்ததில் இருந்து இதுவரையில் 27,000 பேரை மாத்திரமே அரசாங்கம் விடுவித்துள்ளது. தற்போது பொது மக்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டிருக்க வேண்டிய காலம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையிலேனும் அரசாங்கத்தின் உறுதியளிப்புகள் மீறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி பொது மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த மே மாதம் 7ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணையத்தளத்தில் 80 சதவீதமான மக்கள் இந்த வருடத்தின் இறுதிக்குள் குடியமர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் மே மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 180 நாட்கள் வேலைத்திட்டத்தின் ஊடாக மீள் குடியேற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதியளித்தார்.

ஜூலை மாதம் 16ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த வருட இறுதிக்குள் 70 – 80 சதவீதமான மக்களை குடியமர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

எவ்வாறாயினும் இந்த வருட இறுதியில் ஒரு லட்சம் பேரை மீளக் குடியமர்த்துவதாக அமைச்சர் சரத் அமுனுகம கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி ஸ்தான்புலில் இடம்பெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். ஒக்டோபர் 16ஆம் திகதி மீள் குடியேற்றத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் 100000 மக்கள் மீளக் குடியமர்த்துவதே எமது திட்டம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அண்மைய ஊகிப்பு அடிப்படையில் முகாம்களில் உள்ள 37 சதவீதமான மக்களே இந்த ஆண்டின் இறுதியில் குடியமர்த்தப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது” என பிரட் எடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply