வியட்நாம் விஜயத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து கொண்டு ஜனாதிபதி நாடு திரும்பினார்
வியட்நாம் நாட்டுக்கு மூன்று நாட்கள் மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தூதுக் குழுவினரும் நேற்று முன்தினம் நாடு திரும்பினர்.வியட்நாம் ஜனாதிபதி குயேன் மின் ரைட்டின் அழைப்பின் பேரில் கடந்த 22ம் திகதி ‘ஸ்ரீலங்கன்’ விசேட விமானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், உயர்மட்ட தூதுக் குழுவினரும் வியட்நாம் நொய்பாய் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.
அங்கு இலங்கை ஜனாதிபதிக்கு விசேட அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டதுடன், ஜனாதிபதியும், தூதுக்குழுவினரும் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையில் கோலாகலமான முறையில் வரவேற்கப்பட்டனர்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியட்நாமுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் பயனாக இருநாடுகளும் பல நன்மைகளைப் பெற்றுக் கொண்டுள்ளன. இலங்கைக்கும், வியட்நாமுக்குமிடையில் இராஜதந்திர ரீதியிலான தொடர்பாடல் ஏற்படுத்தப்பட்டு 39 வருடங்களாகின்றன.
இக்காலப் பகுதியில் இலங்கை அரச தலைவர் ஒருவர் வியட்நாமுக்குச் சென்றது இதுவே முதற் தடவையாகும். இதனையிட்டு வியட்நாமிய அரச தலைவர்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட இவ்விஜயத்தின் பயனாக இந்நாட்டின் வட மாகாண புனர்வாழ்வு மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கும், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் உதவி, ஒத்துழைப்புகளை நல்குவதற்கு வியட்நாம் இணக்கம் தெரிவித்திருக்கின்றது.
2010ம் ஆண்டில் வியட்நாமின் தூதரகத்தை மீண்டும் இலங்கையில் திறப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொள்ளவும் வியட்நாம் விருப்பம் தெரிவிக்கின்றது. அத்தோடு இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை 2012ம் ஆண்டாகும் போது வருடத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
தற்போது இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகள் வருடத்திற்கு 65 மில்லியன் வரை இடம்பெறுகின்றன.இலங்கை ஜனாதிபதிக்கும், வியட்நாம் பிரதமருக்குமிடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையிலேயே இவ்விடயங்களில் இணக்கம் காணப்பட்டுள்ளன.
இதேநேரம் வியட்நாம் ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம் அளித்தார். இவ்விருந்துபசாரத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்தவும், வலுப்படுத்தவும், நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் பயனாக இரு நாடுகளும் நன்மை பெற்றுக் கொள்ளக் கூடிய இரு நாட்டுத் தலைவர்களதும் முன்னிலையில் ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. கலாசாரம், முதலீடு, மீன்பிடி, விவசாயம், குற்றச் செயல் தடுப்பு ஆகிய ஐந்து அம்சங்களிலேயே இவ்வுடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் போது, வியட்நாம் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலிட ஊக்கமளிப்பதற்கு கம்யூனிஸக் கட்சிப் பொதுச் செயலாளர் இணக்கம் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்விஜயத்தின் போது, வியட்நாமுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஹோ சி மின்னின் நினைவு தூபிக்கு நேரில் சென்று மலரஞ்சலியும் செலுத்தினார்.
அவரது அஸ்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கும் இலங்கை ஜனாதிபதியும், குழுவினரும் நேரில் சென்றனர். அதேநேரம் ஹனோய் நகரிலுள்ள அந்நாட்டு இலக்கிய மரபுகளை சித்தரிக்கும் விஹாரைக்கும் ஜனாதிபதியும், குழுவினரும் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து வியட்நாமின் பிரதான வர்த்தக நகரான ஹோசி மின்னுக்கும் இவர்கள் சென்றனர். அந்நகர பொது மக்கள் சபையின் தலைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் வியட்நாம் – இலங்கை வர்த்தக பிரதிநிதிகளையும், வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை ஒரு சுதந்திர தேசம், பயங்கரவாதமற்ற நாடு. வர்த்தக ரீதியாகத் துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் தேசம். அதனால் இங்கு முதலிட வருமாறு இச்சமயம் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
இதன் பின்னர் வியட்நாம், வியட்கொங்க் கெரில்லாக்கள் பயன்படுத்திய முக்கியத்துவம் மிக்க சுசி சுரங்கப் பாதையையும் ஜனாதிபதியும் குழுவினரும் பார்வையிட்டனர். அத்தோடு ஹோ சி மின் நகரிலுள்ள 1975ம் ஆண்டு யுத்தத்தின் முக்கிய நிகழ்வுகளை நினைவுபடுத்தக் கூடிய நூதனசாலைக்கும் இவர்கள் சென்று பார்வையிட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply