உடன் செய்ய வேண்டியதை உடன் செய்வதே நாட்டை கட்டியெழுப்ப சிறந்த வழி: ஜனாதிபதி
உடன் செய்ய வேண்டியதை உடன் செய்வதே நாட்டை கட்டியெழுப்ப சிறந்த வழியாகுமெனவும் உடனடியாக செய்ய வேண்டியதை எதிர்காலத்திற்கு பின்போடுவதால் அது பெரும் சுமையாக மாறுகிறது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற கொழும்பு நாலந்தா கல்லூரியின் பரிசளிப்பு வைபவத்தில்; பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதிஇவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதை எமது முன்னைய தலைவர்கள் காலந்தாழ்த்தியதாலேயே அது எமக்குப் பெரும் சுமையாகவும் சவாலாகவும் அமைந்தது. எம்மைப் பற்றிய சரியான மதிப்பீடு எமக்கு இருக்க வேண்டியது அவசியம். அவ்வாறில்லாவிடில் நாம் எதனையும் சரியாகத் திட்டமிட முடியாது. நாம் செய்யும் செயற்பாட்டிற்கிணங்கவே உலகம் எம்மை மதிப்பீடு செய்யும்.
நாலந்தாக் கல்லூரி நாட்டின் வரலாற்றில் முக்கியமான தொன்றாகும் என்பதுடன் நாட்டின் சிறந்த சொத்தாகும். நானும் நாலந்தாவின் மாணவன். பல சிறந்த தலைவர்களை இந்தக் கல்லூரி நாட்டிற்குத் தந்துள்ளது. நான் இங்கு கற்ற காலத்தின் நினைவுகள் அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. அன்று நான் வைத்துக் கொண்ட நட்பு இன்றும் தொடர்கிறது.
நாலந்தாக் கல்லூரியைக் கட்டியெழுப்ப அன்று அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை நான் இன்று குறிப்பிடுவது பொருத்தமாகும். அவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் முன்னுதாரணமானது. அவ்வாறானவர்களிடம் கற்றால் மட்டுமே நாட்டின் பயனுள்ள பிரஜையாக உருவாக முடியும்.
நான் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் நாட்டை ஒன்றிணைப்பதற்காக மதத் தலைவர்களின் இணக்கப்பாட்டுக்காக விகாரைகள் தோறும் ஏறி இறங்கினேன். சிலர் என்னைப் பார்த்துச் சிரித்தனர். இத்தகைய சிரிப்புகளைப் பொருட்படுத்தக் கூடாது. அவமானங்களுக்குப் பயப்படக் கூடாது. முதன் முதலில் குடை தயாரித்து குடையை உயர்த்தியவரைப் பார்த்து மக்கள் சிரித்த சம்பவமும் உண்டு.
எமது மனத்திற்கு நேர்மையானதாகக் கருதி முன்னெடுக்கும் செயற்பாடுகளில் எமக்கு அவப்பேறு வருவது சகஜம். அதனைத் தாங்கிக் கொள்ளும் பலம் வேண்டும். நாட்டை மீட்கும் யுத்தத்தின் போது எம்மையும் பலர் பரிகசித்தனர். மாட்டிற்கும் யுத்தம் செய்ய முடியும் எனவும் எம்மை சர்வதேசம் கணக்கெடுக்கவில்லை எனவும் பலர் பரிகசித்தனர். எனினும் நாம் சளைக்காமல் முன்னேறினோம்.
தூற்றுதலுக்கு நாம் அடிபணியாவிட்டால் அடுத்து நம் செயலுக்குத் தடைபோடுவார்கள். அதுவும் பலிக்காவிட்டால் எமக்கெதிராக “பெட்டிசம்” அடிப்பார்கள் அடுத்த கட்டம் எம்மைக் கொல்லவும் முனைவார்கள். இவற்றிற்குச் சளைக்காமல் நாம் முன் சென்றால் வெற்றி பெறலாம். அதற்குப் பின் அவர்களே எம்மிடம் வருவார்கள். மாணவர்கள் சமூகத்தில் கால் பதிக்கும் போது இருவகை மனிதர்களை சந்திக்க நேரும் ஒரு வகையினர் செயல் வீரர்கள் மற்றவர் வெறுமனே மதிப்பு பெற முயல்பவர்கள். நான் எப்போதும் முதலாவது வகையே.
அவ்வாறிருந்தால் எந்தப் போட்டியும் பொறாமையும் எம்மை மேவ முடியாது. அதே போன்று சகலதும் கிடைத்ததும் செயலில் இறங்கலாம் என காத்திருக்கக் கூடாது ஆரம்பத்தில் அது தானே வந்து சேரும். அதற்கு நாலந்தா கல்லூரியின் ஆரம்பம் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, ராஜித சேனாரத்ன, நிர்மல கொத்தலாவல உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply