அணு ஆயுத உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும்: வடகொரிய பாராளுமன்றத்தில் கிம் ஜாங் அன் உரை

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக தென்கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் கருதுகின்றன.

இதனால் இந்த இரு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இப்போர்ப்பயிற்சியானது அந்த நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது. எனவே இதனை நேட்டோவின் ஆசிய பதிப்பை இவர்கள் உருவாக்கி வருவதாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் குற்றம்சாட்டினார். தங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் இந்த அச்சுறுத்தலை கைவிட வேண்டும் என கிம் ஜாங் அன் கூறினார்.

இருப்பினும் இந்த போர்ப்பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த இரு வாரங்களுக்கு முன் கிம் ஜாங் அன் ரஷிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ராணுவ தளங்களை பார்வையிட்ட அவர் அதிபர் புதின் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். இதனால் இரு நாடுகளிடையே ஆயுத ஒப்பந்தம் நடைபெற்று இருக்கலாம் என தென்கொரியா குற்றம்சாட்டியது.

இந்தநிலையில் வடகொரியாவில் பாராளுமன்றம் கூடியது. இதில் கிம் ஜாங் அன் கலந்து கொண்டு பேசுகையில், `உலகம் புதியதொரு பனிப்போரில் நுழைகிறது. இதில் அமெரிக்காவை எதிர்கொள்ளும் கூட்டணியில் வடகொரியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும். எனவே அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் என கூறினார். இதனால் அங்கு மேலும் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply