மயிலத்தமடுவில் வன்முறை வெடிக்கும் அபாயம் குவிக்கப்படும் இராணுவம் மற்றும் பொலிஸ் : சுகாஷ்

மயிலத்தமடுவில் இருந்து துரத்தப்பட்ட 990க்கும் அதிகமான பண்ணையாளர்கள் உடனடியாக மீளவும் அவர்களுடைய பூர்வீக இடங்களுக்கு திரும்பி அவர்களது வாழ்வாதார தொழில்களை செய்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்று நாங்கள் இந்த இடத்தில் கோரிக்கை விடுக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடுவில் இன்று (08) இடம்பெற்றுவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மயிலத்த மடுவிலிருந்து விரட்டப்பட்ட தமிழ் பண்ணையாளர்களுக்கு நீதி கோரியும், ஜனாதிபதி ரணிலுடைய விஜயத்தின் போது மட்டக்களப்பினுடைய பண்ணையாளர்களதும் எமதும் எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாங்கள் இங்கே கூடி இருக்கின்றோம்.

மக்களுடைய ஜனநாயகக் குரல்வளையை அடக்குவதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இராணுவத்தினர் பேருந்து பேருந்தாக கொண்டு வந்து இறக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

இங்கு வன்முறை ஏற்படக்கூடிய ஒரு பதற்றமான சூழல்தான் நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆனால் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.

அவர்கள் போராடுவது அவர்களுடைய ஜனநாயக உரிமைக்காக. நாங்கள் போராடுவது அந்த மக்களுடைய ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவதற்காக. எத்தகைய அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்டாலும் எங்களுடைய போராட்டம் தொடரும்.

நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்ற விடயம் மயிலத்தமடு பால்பண்ணையாளர்களுடைய வாழ்வாதாரம், பூர்வீக காணிகள் மீளவும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply