பல இலக்குகளுடன் ஜனாதிபதி ரணில் சீனாவுக்கு விஜயம்

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு செல்கின்றது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசின் முக்கியஸ்தர்களுடன் பெய்ஜிங்கில் பரந்துப்பட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு பல்வேறு எதிர்பார்ப்புகளுடனேயே சீனா செல்கின்றது. அந்த வகையில் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் தவணைகள் உள்ளிட்ட தடைப்பட்ட திட்டங்களுக்கு நிதி பெறுதல் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் என்று பரந்துப்பட்ட இலக்குகளை உள்ளடக்கியதாகவே இந்த விஜயம் அமைந்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு

குறிப்பாக சீன சந்திப்புகளின் போது கடன் மறுசரீமைப்புக்கான ஒத்துழைப்பு குறித்து ஜனாதிபதி ரணில் அந்நாட்டு தலைவர்களுடன் நேரடியாகவே கலந்துரையாட உள்ளார். ஏனெனில் சீனாவின் ஒத்துழைப்பு இன்றி பரிஸ் கழக நாடுகளினால் இலங்கையின் சர்வதேச கடன்கள் குறித்து பொது இணக்கப்பாட்டிற்கு வருவது கடினமாகியுள்ளது. ஆனால் இலங்கையின் சர்வதேச கடன் மறுசீரமைப்புகளில் ஏனைய நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படுவதை சீன விரும்ப வில்லை.

இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பரிஸ் கழக பிரதிநிதிகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்புகளை பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் சீனா தனித்து செயல்படுகின்றமையினால் இறுதி இலக்கை அடைவதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட கூடும்.

கடன் தவணைகள்

எவ்வாறாயினும் கடன் தவணைகளை செலுத்துவதற்கான இருவருட கால அவகாசத்தை சீன இலங்கைக்கு ஏற்கனவே வழங்கியுள்ளது. கொவிட் பெரும் தொற்று மற்றும் அதன் பின்னரான இலங்கையின் பொருளாதார – அரசியல் கொந்தளிப்புகளை கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த கால அவகாசத்தை சீனா வழங்கியிருந்தது.

ஆனால் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் குறித்த கால அவகாசம் நிறைவடைகின்ற நிலையில் ஜனவரி மாதத்திலிருந்து கடன் தவணைகளை சீனாவுக்கு செலுத்த வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதே வேளை சீன விஜயத்தின் போது கடன் தவணைகளை மீள செலுத்துவதற்கான கால எல்லையை மீண்டும் வருடத்திற்கு நீடிக்கும் கோரிக்கையை இலங்கை முன் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலீட்டு இலக்குகள்

புதிய முதலீடுகளை பெற்றுக் கொள்ளுதல், புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல் மற்றும் தடைப்பட்ட திட்டங்களுக்கான நிதியை பெற்று மீண்டும் திட்டங்களை தொடங்குவது ஆகியவையும் சீன விஜயத்தில் ஜனாதிபதியின் முக்கிய இலக்குகளாக உள்ளன. குறிப்பாக கொழும்பு துறைமுக நிதி நகரத்திற்கான முதலீடுகளை விரைவுபடுத்த கலந்துரையாடப்படும்.

அதே போனடறு மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கான நிதியை பெற்று மீள ஆரம்பிப்பது குறித்து எக்ஸிம் வங்கியுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட உள்ளன. இதேவேளை மூலோபாய இருப்பிடம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியங்களுக்கு பெயர் பெற்ற ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் சீன பங்களிப்புடனான புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கிய கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திரகரிப்பு திட்டம்

குறிப்பாக 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது இறுதி செய்யப்பட உள்ளது. இந்த முதலீடு பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவது மட்டுமன்றி இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தும்.

அத்துடன் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பரந்த நுகர்வோர் சந்தை மற்றும் முதலீட்டுத் திறன் ஆகியவற்றுக்கு சீனாவுடன் வலுவான பொருளாதார உறவுகளை உருவாக்குவதற்கும் தனது இந்த விஜயத்தைப் பயன்படுத்துவதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நோக்கமாகக் கொண்டுள்ளார்.

மேலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, முதலீட்டுக்கான புதிய வழிகளை ஆராய்வது, வர்த்தக ஒப்பந்தங்களை வளர்ப்பது மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவியை பெறுதல் என்பவற்றை உள்ளடக்கியதாகவே இலங்கை குழுவின் சீன விஜயம் அமைந்துள்ளது. இதன் மூலம் பயனுள்ள கலந்துரையாடல்கள் மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல், இலங்கை மக்களுக்கு அதிகரித்த வர்த்தக வாய்ப்புகள், தொழில் உருவாக்கம் மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் அபிவிருத்தி ஆகியவற்றிற்கு வழி வகுக்க ஜனாதிபதி முயல்கின்றமை வெளிப்படுகின்றது.

சீனாவுக்கான எதிர்பார்க்கப்பட்ட இந்த விஜயம் இரு நாடுகளுக்குமே முக்கியமான ஒன்றாகியுள்ளது. இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை குறிப்பதாகவும் அமைகின்றது. ஒரு பாதை ஒரு மண்டலம் என்ற சீன முன்முயற்சி திட்டத்திற்கு இலங்கையின் ஒத்துழைப்புகள் விஜயத்தின் போது உறுதிப்படுத்தப்படும்.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி

மேலும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி சூரிய சக்தி திட்டத்தினை முன்னெடுப்பதற்காக 220 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க உறுதியளித்துள்ளது. அத்துடன் இலங்கையில் மின்சார இணைப்பு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஏனைய திட்ட மேம்பாட்டு நோக்கங்களுக்காக கூடுதலாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply