அமெரிக்காவில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 6 வயது சிறுவனை 26 முறை கத்தியால் குத்திக்கொன்ற முதியவர்
அமெரிக்கா சிகாகோவில் இருந்து தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் 32 வயது முஸ்லிம் பெண் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது 71 வயது முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்தார்.
திடீரென அவர் அந்த பெண்ணையும் அவரது மகனையும் வெறித்தனமாக கத்தியால் தாக்கினார் . 6 வயது சிறுவனை அவர் தொடர்ந்து கத்தியால் குத்திக்கொண்டே இருந்தார். இதில் அவனது உடலில் 26 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவன் கீழே சரிந்தான்.
இதைபார்த்த அந்த பெண் தனது மகனை காக்க முதியவருடன் போராடினார். அவரையும் முதியவர் கத்தியால் குத்தினார். அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் வீட்டு குளியல் அறைக்குள் ஓடினார். ஆனாலும் அந்த முதியவர் அவரை விடவில்லை. கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மேலும் தனது கணவருக்கும் செல்போனில் தகவல் அனுப்பினார். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணையும், சிறுவனையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக இறந்தான். மருத்துவ பரிசோதனையில் அவனது உடலில் கத்தி இருந்தது தெரியவந்தது. அந்த கத்தி வெளியே எடுக்கப்பட்டது. சிறுவனின் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிறுவனை ஈவு இரக்கம் இல்லாமல் குத்திக்கொன்ற ஜோசப் சுபா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவர் நில உரிமையாளராக இருந்து வருகிறார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டையின் எதிரொலியாக அமெரிக்காவில் வசித்து வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை முதியவர் குத்திக்கொன்றதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சிறுவன் மற்றும் படுகாயம் அடைந்த அவனது தாய் பெயர் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply