பெல்ஜியம் தலைநகரில் இருவர் சுட்டுக்கொலை

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் திங்கட்கிழமை இரவு சுவீடன் நாட்டவர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஐஎஸ் அமைப்பு உறுப்பினராக தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட ஆடவர் ஒருவர், இணையத்தில் பதிவேற்றம் செய்த காணொளி ஒன்றில் துப்பாக்கிச்சூட்டிற்குப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பெல்ஜியம், சுவீடன் அணிகளுக்கு இடையே யூரோ 2024 தகுதிச்சுற்று காற்பந்து ஆட்டம் ஒன்று தொடங்கவிருந்த வேளையில், அந்தச் சந்தேக ஆடவன் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டான்.

அவனைத் தேடிப் பிடிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள வேளையில், பெல்ஜியத்தில் பயங்கரவாத எச்சரிக்கை நிலை ஆக உச்சத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தலைமறைவான அந்தத் துப்பாக்கிக்காரனுக்கு இஸ்ரேல்-ஹமாஸ் போருடன் தொடர்பிருந்ததாக ஆதாரம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.

சுவீடன் நாட்டவரைக் குறிவைத்து அந்தச் சந்தேக ஆடவன் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தெரிகிறது என்றார் அந்த வழக்கறிஞர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமுற்ற மூன்றாமவரான டாக்சி ஓட்டுநர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்று அந்த வழக்கறிஞர் சொன்னார்.

மிரட்டல் முடியும்வரை பிரஸ்ஸல்சில் மக்கள் உட்புறங்களில் இருக்குமாறு அந்த வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஐரோப்பிய ஆணையப் பணியாளர்களும் உட்புறங்களில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் சுவீடன் நாட்டவர் என்பதை உறுதிப்படுத்திய பெல்ஜியப் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ, சுவீடன் பிரதமருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

சம்பவம் குறித்து மேல்விவரங்களைப் பெற பெல்ஜிய அதிகாரிகளுடன் சேர்ந்து சுவீடன் அரசாங்கம் தீவிரமாகப் பணியாற்றியதாக சுவீடனின் நீதித்துறை அமைச்சர் குனார் ஸ்டோம்மர் ராய்ட்டர்சிடம் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply