இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேல் செல்கிறார். தன்னை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் திரு பைடனின் பயணம் அமைவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
காஸாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக தரைவழித் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தயாராகிவரும் வேளையில், அந்நாட்டுடனான ஒருமைப்பாட்டை திரு பைடன் மறுஉறுதிப்படுத்துவார் என்று திரு பிளிங்கன் கூறினார்.
முன்னதாக, திரு நெட்டன்யாகுவுடன் திரு பிளிங்கன் ஒன்பது மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அது செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நீடித்தது.
டெல் அவிவ் நகரில் இஸ்ரேலின் போர்க்கால அமைச்சரவையுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு பிளிங்கன், “ஹமாசிடம் இருந்தும் மற்ற பயங்கரவாதிகளிடம் இருந்தும் தன் மக்களைத் தற்காக்க இஸ்ரேலுக்கு உரிமையும் கடமையும் இருப்பதை திரு பைடன் தெளிவுபடுத்துவார்,” என்று சொன்னார்.
இஸ்ரேல் அதன் போர் இலக்குகளையும் உத்திகளையும் திரு பைடனுக்கு விளக்கும் என்றும் திரு பிளிங்கன் குறிப்பிட்டார். முடிந்தவரை குடிமக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படாதவாறும் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வகைசெய்யும் விதத்திலும் எப்படித் தாக்குதல் நடத்தப்படும் என்பது பற்றியும் திரு பைடனுக்கு இஸ்ரேல் விளக்கமளிக்கும்.
மற்ற நாடுகளிடம் இருந்தும் பலதரப்பு அமைப்புகளிடம் இருந்தும் மனிதாபிமான உதவிகள் காஸாவில் குடிமக்களைச் சென்றடைவதை வகைசெய்ய அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டம் ஒன்றை வகுக்க இணக்கம் தெரிவித்திருப்பதாக திரு பிளிங்கன் பகிர்ந்துகொண்டார்.
காஸாவுக்குள் செல்லும் உதவிகளை ஹமாஸ் பறிமுதல் செய்துவிடவோ அழித்துவிடவோ செய்யலாம், அல்லது மக்களிடம் உதவிகள் சென்றடைவதைத் தடுத்துவிடலாம் என்பது குறித்த இஸ்ரேலின் கவலையை அமெரிக்கா புரிந்துகொள்வதாக அவர் சொன்னார்.
“குடிமக்களிடம் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை ஹமாஸ் தடுத்தால், அதற்கு நாங்கள்தான் முதலில் கண்டனம் தெரிவிப்போம். அது மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் இணைந்து செயல்படுவோம்,” என்றார் திரு பிளிங்கன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply