பிணைக் கைதிகள் விரைந்து திரும்ப வேண்டி டெல் அவிவில் ஒன்றுகூடிய இஸ்ரேல் மக்கள்

ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்ட மக்கள் விரைந்து நாடு திரும்ப வேண்டி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஒன்று கூடி ‘Lighting up the Light’ என்ற பிரச்சார இயக்கத்தை மக்கள் முன்னெடுத்தனர்.

காலியான நாற்காலிக்கு முன்பு உள்ள சாப்பாட்டு மேசையின் கண்ணாடி கோப்பையில் மெழுகுவர்த்தியை ஏற்றி, மக்கள் தங்கள் கருத்தை வலியுறுத்தி உள்ளனர். அந்த மேசையின் மீது உணவுகளும் வைக்கப்பட்டு இருந்தது. இதில் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட மக்களின் உறவினர்கள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதோடு வீதிகளிலும் மக்கள் விளக்குகளை ஏந்தி பிணைக் கைதிகள் விரைந்து நாடு திரும்ப வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

கடந்த 7-ம் தேதி ஏராளமான இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றனர். இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து அவர்கள் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பிணைக் கைதிகளில் சிலர் உயிரிழந்தனர். சிலரை இஸ்ரேல் மீட்டது. இருந்தாலும் மேலும் பலர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளனர்.

“இங்குள்ள காலி நாற்காலிகள் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள், யூதர்கள் மற்றும் பிற நாட்டு மக்களை இந்த விருந்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அக்டோபர் 7-ம் தேதி அன்று காலை தெற்கு பகுதியில் நடைபெற்ற கொடூர தாக்குதலை அடுத்து அவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் சிலர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர். சிலர் படுகொலை செய்யப்பட்டனர். இது மிகவும் மோசமானது. இதை செய்தவர்கள் மனிதர்கள் அல்ல தீவிரவாதிகள். சிறை பிடிக்கப்பட்டுள்ள அவர்களின் நிலை குறித்தும், அவர்களின் உடல்நிலை குறித்தும் அறியாமல் தவிக்கிறோம்” என்கிறார் பிணைக் கைதியாக பிடித்து செல்லப்பட்டவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர்.

“பிணைக் கைதிகளின் நிலையை எண்ணி நான் வருந்துகிறேன். 19 வயதான எனது மகன் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். அவர் ராணுவ வீரர். காலை 6.30 மணி அளவில் அவர் கடத்தப்பட்டார். ‘நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்’ என்பது தான் கடைசியாக அவர் எங்களிடம் பேசிய வார்த்தைகள்” என ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதியின் தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.

“வீட்டில் இருந்த குழந்தைகளை ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றுள்ளனர். போர் என்பது இரு தரப்பில் உள்ள ராணுவத்துக்கும் இடையிலானது. இதில் அப்பாவி மக்கள் என்ன செய்தனர். குழந்தைகள் என்ன செய்தனர். அவர்கள் நாடு திரும்ப வேண்டும். அதற்கான உதவி வேண்டும். அதை மட்டுமே நான் விரும்புகிறேன். நிச்சயம் அவர்கள் நாடு திரும்புவார்கள் என நம்புகிறேன். அதுவரை இதனை நிறுத்தப் போவது இல்லை” என மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply