ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றக்குழுவை 30 ஆம் திகதி சந்திக்கிறது சிவில் சமூகம்

நாட்டுக்கு வருகைதரவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் குழுவிடம் புதிய அடக்குமுறை சட்டமூலங்கள் மற்றும் வட, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கள், பௌத்த சிங்கள மயமாக்கல் என்பன தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கவிருப்பதாக சிவில் சமூகப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பின்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹெய்டி ஹோற்றாலா, போலந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிஸ்லோ க்ரஸ்நோட் ஸ்கி, ஜேர்மனியை பிரதிநிதித்துவப்படுத்தும் கார்ஸ்றென் லுகே மற்றும் லிதுவேனியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அவுஸ்ரா மோல்டெய்கினி ஆகிய நால்வர் அடங்கிய பாராளுமன்றக்குழுவினர் எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

சுமார் ஒருவாரகாலம் வரை நாட்டில் தங்கியிருப்பதற்குத் திட்டமிருக்கும் அவர்கள், அக்காலப்பகுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். இதன்போது நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் குழுவினர் அன்றைய தினமே கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளனர்.

இச்சந்திப்பின்போது உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள், மாகாணசபைத்தேர்தல் என்பவற்றை நடத்துவதை அரசாங்கம் தொடர்ந்து காலந்தாழ்த்திவருவது குறித்தும், தற்போது தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பது குறித்தும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெளிவாக எடுத்துரைக்கவிருப்பதாக சிவில் சமூகப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று, பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக அதனைவிடவும் மிகமோசமான உள்ளடக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், நிகழ்நிலைக்காப்புச்சட்டமூலம் என்பன உள்ளடங்கலாக அண்மையகாலத்தில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுவரும் புதிய அடக்குமுறை சட்டமூலங்கள் தொடர்பாகவும் அவர்கள் எடுத்துரைக்கவுள்ளனர்.

குறிப்பாக அண்மையில் அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகச் சட்டமூலம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டவுள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகள், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இது வீணாக நிதியைச் செலவிடும் நடவடிக்கையாக அமைந்திருக்கின்றதே தவிர, உண்மையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அது எவ்வகையிலும் உதவாது எனவும் குறிப்பிடவுள்ளனர்.

மேலும், வட, கிழக்கு மாகாணங்களில் தீவிரமடைந்துவரும் காணி அபகரிப்புக்கள் மற்றும் இந்துக்களின் மதவழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டும், கைப்பற்றப்பட்டும் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படல், சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி சுருக்கமடைதல், ஊழல் மோசடிகள் ஏற்படுத்தியுள்ள மிகமோசமான தாக்கங்கள் என்பன பற்றியும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கவிருப்பதாக சிவில் சமூகப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply