இலங்கையிலுள்ள எவருக்கும் மஹிந்த, கோட்டா, பசில் உள்ளிட்டோரிடமிருந்து ரூ. 150, 000 கோரலாம்” : கிரியெல்ல
இந்தநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிடம் இருந்து, 22 மில்லியன் மக்களில் ஒவ்வொருவருக்கும் தலா 150,000 ரூபாய் வசூலிக்கும் திறன் இருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்து நேற்று(14) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார்.
“.. உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.அடிகல, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர, இலங்கை நிதிச் சபை உறுப்பினர்கள் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்டோர் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் தீர்ப்பை அறிவிக்கும் போதே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதனைத் தெரிவித்தனர். இதை ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறோம். நாங்கள் மூன்று வருடங்கள் பேசினோம், ஆனால் இதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கும், மனுதாரர்களுக்கும் தலைவணங்குகிறோம்.
இதன் பொருள் என்ன தெரியுமா? இலங்கையில் 22 மில்லியன் மக்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் நீதிமன்றத்திற்குச் சென்று இந்த 07 பேரிடம் இருந்து 150,000 ரூபாவை பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் இந்த மனுதாரர்களுக்கு 150,000 ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது..”
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply