கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்துள்ளது : ஜனாதிபதி
இரு தரப்பினருக்கு இடையிலான மோதல் காரணமாக இந்நாட்டின் கிரிக்கெட் சரிவை சந்தித்துள்ளது. எனவே அரசியல் தலையீடின்றி கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.கிரிக்கெட் தொடர்பிலான பிரச்சினையில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்பதோடு, சித்ரசிறி அறிக்கைக்கமைய புதிய கிரிக்கெட் சட்டமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தான் பல தடவைகள் விளக்கியிருந்தாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் இன்று (22) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டதாவது,
கிரிக்கெட் விவகாரத்தில் நான் சிலரைப் பாதுகாக்க முற்படுவதாக கூறப்பட்டது. கிரிக்கெட் விவகாரம் நீண்ட கால பிரச்சினை. இரு தரப்பினருக்கு இடையிலான மோதல் காரணமாக கிரிக்கெட் சரிவை சந்தித்துள்ளது. அதற்கான தீர்வாக புதிய சட்டத்தை உருவாக்கி சட்டத்துக்கமைய சரியான குழுவை தெரிவு செய்ய வேண்டும் என்றே நான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தியுள்ளேன். அதற்காகவே சித்ரசிறி அறிக்கையை பின்பற்றி அந்த சட்டத்தை உருவாக்குமாறு கூறினேன்.
குறித்த வழக்கு தொடர்பில் அமைச்சருக்கு அறிவுறுத்தியிருந்தேன். இவ்வாறான நிலைமைகள் தொடரும் பட்சத்தில் ஐ.சீ.சீ தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறியிருந்தேன்.
அதேநேரம், ஐ.சீ.சீயுடனும் கலந்தாலோசித்தேன். அரசியல் தலையீடு உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதனாலேயே புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தினேன்.
தற்போது எமக்கு எதிராக 02 குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அதன்படி கிரிக்கெட் சபையை நாம் கலைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அமைச்சரின் செயற்பாடு சட்டபூர்வமானதா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்குமென நான் தெரிவித்துள்ளேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply