பொலிஸாரின் அடாவடி தனத்தை கண்டித்து முல்லைத்தீவில் மாபெரும் கண்டன போராட்டம்

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட செயற்பாட்டை கண்டித்து போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸாரின் அடாவடித்தனத்திற்கு எதிராக எதிர்வரும் 08.01.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக குறித்த போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதேவேளை அன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போராட்டத்திற்கு அழைப்பு முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (06.01.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பொதுக்கூட்டம் காலை 11 மணிக்கு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

எங்களுக்கான முடிவுகளை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் பல நெருக்கடிக்கடிக்கு மத்தியில் நாங்கள் இருக்கிறோம். அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளை இல்லாமல் செய்வதற்கு பல வழிகளில் முனைகின்றார்கள்.

இதனை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் எங்களுக்கான முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டும்.

இவ்வாறான நிலையில் நாங்கள் ஒன்று கூடுவதற்கு இடங்கள் கேட்டால் இடத்தை தருபவர்களை புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்துகின்றனர்.

இதேவேளை எதிர்வரும் 08.01.2024 காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய ஒருபோராட்டத்தினையும் முன்னெடுக்கவுள்ளோம்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவியினை பொலிசார் கைதுசெய்துள்ள நிலையில் தொடரும் பொலிஸாரின் அடாவடித்தனத்தினை கண்டித்து இந்த போராட்டத்தினை நடத்தவுள்ளோம்.” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply