ஏ-9 வீதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்வு

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் செளகரியம் கருதி ஏ-9 வீதியின் மூலம் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயணிகள் போக்குவரத்துக்கும் இருந்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்கம் நேற்று விடுத்த அறிக்கையில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் பற்றி மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இருப்பதைப் போன்றே யாழ்ப்பாணத்துக்கும் பொருட்களை கொண்டு செல்வதற்கு அல்லது எடுத்து வருவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.

அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திடம் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ள வாகனங்கள் பொருட்களை கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

யாழ்ப்பாணத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான வாகனங்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திடம் பதிவு செய்வது 2009 நவம்பர் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அரசாங்க டிப்போக்கள், கூட்டுத்தாபனங்கள் வங்கிகள் மற்றும் உற்பத்திக் கம்பனிகள் தமது சொந்த வாகனங்களில் பொருட்களை 6 மாதகாலத்துக்கு தொடர்ந்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனங்கள் அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொது மக்கள் தற்போது சேவையிலீடுபடும் பொது போக்குவரத்து மூலம் அல்லது தனியார் பஸ்கள் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும் அனுமதிக்கப்படுவர்.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் சேவையிலீடுபட விரும்பும் தனியார் பஸ் மற்றும் சொகுசு பஸ்களின் சொந்தக்காரர்கள் அதற்கான வீதி அனுமதிப் பத்திரங்கங்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இலங்கை துறைமுக அதிகார சபையின் கப்பல்களுக்கான அனுமதி மற்றும் சேவைக்கான தேவைகளுக்கு ஏற்றதாக அமையும் வகையிலான தனியார் கப்பல்கள் நாட்டின் எந்தவொரு துறைமுகத்தில் இருந்தும் வட பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். இதற்கு அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்தின் அங்கீகாரம் தேவைப்படமாட்டாது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply