புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றியிருப்பது மாவீரர் தின உரையல்ல சர்வதேசத்திடம் பொதுமன்னிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றியிருப்பது மாவீரர் தின உரையல்லவெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், வலுவிழந்துவரும் தமது அமைப்புக்கு உதவுமாறு சர்வதேச சமூகத்திடம் விடுத்திருக்கும் வேண்டுகோள் எனக் கூறியுள்ளது. 
 
விடுதலைப் புலிகளின் தலைவர் தனது உரையின்மூலம் குற்றவாளியென்பதை நிரூபித்துள்ளார். பொதுமன்னிப்புக் கோரியே அவர் இந்த உரையினையாற்றியுள்ளார் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தாம் செய்தவற்றுக்கு சர்வதேசம் பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்றே விடுதலைப் புலிகளின் தலைவர் தனது உரையை ஆரம்பித்துள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் தொடர்ந்தும் இருக்கமுடியாது என்பதை உலகம் உணர்ந்திருக்கும் என கெஹலிய ரம்புக்வெல அந்த ஊடகத்திடம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்பவேண்டுமென அரசாங்கம் விடுத்துவரும் கோரிக்கை பற்றி பிரபாகரன் ஒருவார்த்தைகூட தனது உரையில் குறிப்பிட்டிருக்கவில்லையென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆயுதங்களைக் கைவிடுவது பற்றி அவர்கள் மௌனம் காப்பதானது, பேச்சுக்களுக்கு அவர்கள் தயாரில்லையென்பதையே நிரூபிக்கிறது” என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, “நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்” என விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது மாவீரர்தின உரையில் குறிப்பிட்டிருந்தார்.

சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளும் சமாதானப் பேச்சுக்களைத் தோல்வியடையச் செய்ததாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்ததுடன், போர்நிறுத்தத்தையும், சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது” என விடுதலைப் புலிகளின் தலைவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply