தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு திறந்துள்ள தமிழரசுக் கட்சியின் கதவு: சுமந்திரன்
ஜனாதிபதித் தேர்தலுக்காக தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றன. சமகால அரசியல் நிலவரங்களில் பிரகாரம் மூன்று பிரதானக் கூட்டணிகள் உருவாகுவது உறுதியாகியுள்ளது. அதில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
அந்த நிலையில், ஆளுங்கட்சியின் வேட்பாளர் தொடர்பில் பல்வேறு இழுபறிகள் நிலவி வருகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு அரசாங்கத்துக்குள் வலுப்பெற்றுள்ளதால் அவரை முன்னிறுத்த சிரேஷ்ட அமைச்சர்கள் பொதுஜன பெரமுனவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்தப் பின்புலத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் பேச்சுவார்த்தைகள் நடத்த எமது கட்சியின் கதவுகள் திறந்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்திய அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த எம்.ஏ. சுமந்திரனிடம், ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
“எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவருடனும் இணைந்து பயணிக்க நாம் தயாராக உள்ளோம்.
தென்னிலங்கையில் எந்தவொருக்கு கட்சிக்கும் ஆதவளிப்பதாக நாம் உறுதியளிக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி மாத்திரமல்ல, சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டணியுடனும் நாம் பேச்சுகளை நடத்துவோம்.” எனவும் கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டமைக்காக எம்.ஏ.சுமந்திரன் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்துவிட ஜே.வி.பியே பிரதான காரணமாக உள்ளதான குற்றச்சாட்டுகளின் பின்புலத்தில் சுமந்திரனின் நகர்வு தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply