நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, பாராளுமன்ற முறை மாற்றம்; சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டும்: அநுர பிரியதர்ஷன யாப்பா

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்வதும், பாராளுமன்ற முறையை மாற்றி அமைப்பதும் சமகாலத்தில் மேற்கொள்ளப்படவேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாராளுமன்ற முறையை மாற்றாமல் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை நீக்கினால், ஸ்திரமற்ற நிலை உருவாகும். அவ்வாறு பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றவே எதிர்க் கட்சிகள் முயற்சிக்கின்றன.

இதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்த அமைச்சர், இந்த இரண்டு விடயங்களையும் சமகாலத்தில் மேற்கொள்ள எதிர்க் கட்சிகள் முன்வருமானால் அரசாங்கமும் அதற்கு தயாராகவே உள்ளது என்றும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (செப். 26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார்.

“ஜனாதிபதி முறையை இல்லாது செய்வதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம், அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும். ஜனாதிபதியால் மாத்திரம் தனித்து இதனைச் செய்ய முடியாது.

எதிர்க் கட்சி கூறுவதைப்போல் செய்வதானால் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள பாராளுமன்றத்தில் தான் இதனைச் செய்யவேண்டும். நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் எதனையும் நடத்த முடியாது.

எனவே மீண்டும் ஜனாதிபதி தலைமையில் பலமான ஓர் அரசாங்கத்தை உருவாக்கவேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, பாராளுமன்றம் பலவீனமான நிலையில் ஜனாதிபதி முறையை இல்லாமற் செய்தால், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

நெருக்கடிகளுக்குப் பின்னரான செயற்பாடுகளில் இப்போது நாடு உள்ளது. உலக அரசியல் மாற்றமடைந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் நாமும் செயற்படவேண்டும். இராணுவ மூலோபாயத்தினால் மாத்திரம் யுத்தத்தை வெல்ல முடியாது. அவ்வாறெனில் எப்போதோ வென்றிருக்கலாம்.

ஆகவே, அரசியல் மூலோபாயமும் அவசியம். அந்த இரண்டையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தலைமையில் மேற்கொண்டதனால் தான் எம்மால் யுத்தத்தை வெல்ல முடிந்தது.

அந்த வகையில் ஈடினையற்ற ஒரு பொது ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உள்ளார். அவருக்குச் சவாலாக எவருமே இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply