தேர்தல் வாக்குறுதிகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்

தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டுவார்கள். இது வழமையாக நடக்கின்ற விடயம்.

நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் இதை எதிர்பார்க்கலாம். வெற்றிவாய்ப்புள்ளவர்கள் எனக் கருதப்படும் வேட்பாளர்கள் மாத்திரமன்றி, கட்டுப் பணத்தைப் பெற முடியாத வேட்பாளர்களும் தாராளமாக வாக்குறுதிகளை வழங்குவார்கள்.

வேட்பாளர்களின் வாக்குறுதிகளை வாக்காளர்கள் அப்படியே நம்பி விடக் கூடாது. பல விடயங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். வெற்றி பெறக் கூடியவரா என்பது ஒரு விடயம். கடந்த காலங்களில் இந்த வாக்குறுதிக்கு விசுவாசமாக நடந்திருக்கின்றாரா என்பது இன்னொரு விடயம். இவ்வாறு பல விடயங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.

இனப் பிரச்சினை தொடர்பாகவும் வேட்பாளர்கள் பல வாக்குறுதிகளை அளிப்பார்கள். நவசமசமாஜக் கட்சியின் சார்பில் விக்கிரமபாகு கருணாரட்னவும் களத்தில் இறங்கவிருக்கின்றார். இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாக அவர் வழங்கப் போகும் வாக்குறுதி தமிழ் மக்களைக் கவர்வதாக இருக்கலாம்.

அந்தக் கவர்ச்சிக்காக அவருக்கு வாக்களிப்பதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு மாத்திரமன்றி வாக்குறுதியின் நடைமுறைச்சாத்தியத் தன்மையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப் படுத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீண்ட காலமாகக் கூறி வருகின்றார். அதற்கு ஏற்றவாறு சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவை நியமித்தார்.

விரிவான கருத்துப் பரிமாறல்களுக்குப் பின் அக்குழு அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருக்கின்றது. பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு என்ற இலக்குடன் ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

சமூக சக்திகளின் இன்றைய ஒப்புவலுவினது அடிப்படையில் பார்க்கும் போது இதுவே சமகாலத்தில் நடைமுறைச் சாத்தியமான தீர்வு. இதிலிருந்து முழுமையான அரசியல் தீர்வுக்கான முயற்சியை முன்னெடுக்க முடியும்.

எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் சரத் பொன்சேகாவும் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு பற்றிப் பேசுகின்றார்.

இரண்டு பிரதான வேட்பாளர்களும் இனப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் ஒரே வாக்குறுதியை அளிப்பதால், எந்த வாக்குறுதியில் நம்பிக்கை வைக்கலாம் என்பது பற்றி வாக்காளர்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியினதும் மக்கள் விடுதலை முன்னணியினதும் ஆதரவில் நம்பிக்கை வைத்தே சரத் பொன்சேகா களத்தில் இறங்கியிருக்கின்றார். எனவே, அவரது வாக்குறுதிகளை இக்கட்சிகளை மையமாகக் கொண்டே பார்க்க வேண்டும்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி பூரணமாக ஒதுங்கியிருந்தது. இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியைப் புறக்கணித்தது எனக் கூறலாம்.

மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் அரசியல் தீர்வுக்கு எதிரானது. பதின்மூன்றா வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்து வதையே மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கின்றது. பொன்சேகாவை ஆதரிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் எதிர் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் அவரது வாக்குறுதி போலியானது.

பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு விசுவாசமாக முயற்சிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதியிலேயே மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


Both comments and pings are currently closed.

Comments are closed.