கேபிக்கு சொந்தமான 3 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படும்

கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் கே.பியிற்கு சொந்தமான கப்பல்களில் 3 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

கே.பியின் கட்டுப்பாட்டில் சுமார் 14 கப்பல்கள் இருப்பதாகவும் அவற்றில் 5 கப்பல்கள் அவருடையது என உறுதிபடுத்தப்பட்ட நிலையில் அதில் 3 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் சொத்துக்களை அரச உடமையாக்குவதில் பல பிரச்சினைகள் காணப்பட்டதாக தெரிவித்த அவர், குறிப்பாக கம்பனி, கூட்டுநிறுவனங்கள் என்பவற்றின் சொத்துக்களை அரச உடமையாக்குவதில் சிக்கல்கள் காணப்பட்டாலும் தனியாரின் சொத்துக்களை அரச உடமைக்கும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இதனபடிப்படையிலேயே கே.பியிற்கு சொந்தமான 3 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் 600க்கு மேற்பட்ட வங்கிகளில் உள்ள வைப்புகளையும் பல்வேறு நாடுகளில்  இருக்கும் அவரது சொத்துக்களையும் அரச உடமையாக்கும் செயற்பாட்டிற்காக சட்ட ஆலோசனையையும் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக வெளிநாட்டுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக இந்த கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளன.

சர்வதேச நாடுகளில் புலிகளுக்கு காணப்படும் சொத்துக்களை முடக்கி இலங்கைக்கு கொண்டு வருவதுடன், மறைந்திருக்கும் புலி உறுப்பினர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊடக மத்திய நிலையத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply