மனசாட்சியை அடகு வைக்க முடியாது நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்கிறேன் : தலதா அத்துக்கோரள
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தொடர்ச்சியாக பயணிக்க தனது மனசாட்சி இடம்கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள, தலதா அத்துக்கோரள நேற்றைய தினம் புதன்கிழமை தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்தார். இவ்விடயம் தொடா்பாக நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய அவா்,
இன்று எமது நாடு பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.இந்த நிலையில்தான் ஜனாதிபதித் தேர்தலுக்கு நாம் எதிர்க்கொள்ளவுள்ளோம்.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற மக்கள் போராட்டங்களை அடுத்து, நாட்டு மக்கள் தெளிவான நிலைப்பாட்டுடன் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
எனவே, மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. இன்று ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளது.
கட்சியின் தலைவரும் கட்சியின் பிரதித் தலைவரும் இன்று ஜனாதிபதி வேட்பாளர்களாக இரு முனையில் களமிறங்கியுள்ளனர்.
இந்த தீர்மானத்தை சரியென ஏற்க எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.இதுதொடர்பாக நான் இனியும் அமைதியாக இருந்தால் இந்த பாவத்தின் பங்காளியாக நானும் மாறிவிடுவேன்.
இந்தவிடயம் தொடர்பாக நான் நாட்டு மக்களுக்காக தீர்மானமொன்றை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறேன்.
அந்தவகையில், எனது நாடாளுமன்ற உறுப்புரிமையை நான் இவ்வேளையில் இராஜினாமா செய்கிறேன். இந்த முடிவானது எனக்கு கவலையையோ பின்னடைவையோ ஏற்படுத்தாது.
நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என்றால் ஒன்றிணைய வேண்டும்.
2020 இல் நாடு இருந்த நிலையில், தற்போது நாடு இல்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தங்களோடு இணைந்துக் கொள்ளுமாறு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்தும், சஜித் பிரேமதாஸ அதனை புறக்கணிப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.
சஜித் பிரேமதாஸவுக்கு அவசர அவசரமாக ஜனாதிபதியாக வேண்டும் என்ற எண்ணம் உள்ளதோ என்றும் கூட நான் சிந்தித்துள்ளேன்.இப்படியான அவசரங்களினால் கற்றுக் கொண்ட பாடங்கள் எமது வரலாறு நெடுகிலும் உள்ளன.
அரசியலில் பொறுமையான விடயத்தைவிட பெரிய விடயம் ஒன்றுமில்லை.எப்பயாவது தான் ஜனாதிபதியாக வேண்டும் என்பதுமட்டும்தான் அவரது மனதில் உள்ளது.
அதற்கான காலம் சரியா?- திட்டம் பிழைத்தால் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்?- இதனை நிவர்த்தி செய்ய முடியுமா? என்றெல்லாம் அவர் என்றும் நினைத்ததில்லை.
குறைந்தது நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க தான் தகுதியானவரா?- அதற்கான திறமைகள் தன்னிடம் உள்ளதா என்றுக்கூட அவர் சிந்தித்து பார்த்ததில்லை.
எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லாமல்தான் அவர் தற்போது களமிறங்கியுள்ளார்.
இப்படியான ஒருவரை நாடு முகம் கொடுப்பது இது ஒன்றும் புதிய விடயம் கிடையாது.அதனை கண்முண்னே காட்டிய ஒருவர்தான் கோட்டாபய ராஜபக்ஷ.
எனவே, மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ விட்டுச் சென்றதை தொடரவா இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று இவர்களைக் கேட்க விரும்புகிறேன்.இவர்கள் கோட்டாபய ராஜபக்ஷ விடயத்திலிருந்து பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
தலைமைத்துவத்துக்கு வர ஆசைப்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் சீரழித்தமையும், இறுதியில் மக்களாலேயே அவர் விரட்டியடிக்கப்பட்டதும் இவர்களுக்கெல்லாம் பெரியதொரு பாடமாகும்.
சஜித் பிரேமதாஸவை இந்த நிலைமைக்குத் தள்ளியவர்கள், அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.
மாறாக தாங்கள் எப்படியாவது அடுத்தமுறை நாடாளுமன்றுக்கு வந்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கமாகும்.
இப்படியானவர்களுடன் மனசாட்சியை அடகுவைத்துவிட்டு என்னால் பயணிக்க முடியாது” என தலதா அத்துக்கோரள மேலும் தெரிவித்துள்ளாா்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply