குழப்பத்தில் கூட்டமைப்பு?
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தினம் நெருங்கிக்கொண்டுள்ள நிலையில் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழப்பமடைந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பிடம் ஐந்து தெரிவுகள் இருப்பதாகவும், இறுதி முடிவு என்ன என்பதையிட்டு அடுத்தவாரம் நடைபெறவிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் எனவும் கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் இன்று தெரிவித்தார்.
இரண்டு பிரதான வேட்பாளர்களிடமும் பேச்சுக்களை நடத்தி அதில் ஒருவருக்குத் தமது ஆதரவை கூட்டமைப்பு தெரிவிக்க வேண்டும் என கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் வலியுறுத்துகின்றார்கள்.
இன்னொரு பகுதியினர் கூட்டமைப்பின் சார்பில் ஒருவரை தேர்தல் களத்தில் இறக்க வேண்டும் எனவும், அதற்கு ஏனைய தமிழ்க் கட்சிகளின் ஆதரவைக் கோர வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
மூன்றாவது தரப்பினர் கூட்டமைப்பு எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவைத் தெரிவிக்காமல் தமிழ் மக்களே தீர்மானத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றார்கள்.
தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவுக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவை வழங்க வேண்டும் என நான்காவது தரப்பினர் வலியுறுத்துகின்றார்கள்.
ஐந்தாவது தரப்பினரோ தேர்தலை தமிழ் மக்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும் எனக் கூறுகின்றார்கள். 2005 ஆம் ஆண்டுத் தோதலைப் போல சிங்கள மக்களே தமது அதிபர் யார் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளட்டும் என்பது இவர்களுடைய நிலைப்பாடாக உள்ளது.
இந்தநிலையில் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இது தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்காக அடுத்த வாரம் கூடவிருக்கின்றது. எதிர்வரும் 8ம் திகதி செவ்வாய்கிழமை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இடம்பெறவிருப்பதால் அதற்கு முன்னதாக கூட்டமைப்பின் குழுக் கூட்டம் இடம்பெறும் என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply