மடுத்திருத்தலத்தில் அமல உற்பவ திருவிழா

மடுத்திருத்தலத்தில் இடம்பெற இருக்கும் அன்னையின் அமல உற்பவ திருவிழாவிற்கு பக்தர்கள் சென்று திரும்புவதற்கான விசேட போக்குவரத்திற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருத்தலத்தின் பரிபாலகர் தெரிவிக்கின்றார்.

கத்தோலிக்க திருச்சபையானது வருடம் தோறும் மார்கழி மாதம் 8ம் திகதியை அன்னையின் அமல உற்பவ திருவிழாவாக கொண்டாடிவருகின்றது. அன்னையின் திருவிழாவிற்கான விசேட அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு வழங்கி இருப்பதாக மடுத்திருத்தலத்திற்கு பொறுப்பான அருட்தந்தை டெஸ்மன் குலாஸ் அடிகளார் தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் மடு திருத்தலத்தில் இடம்பெறவிருக்கும் அன்னையின் அமல உற்பவ திருவிழா மார்கழி 5ம் திகதி ஆரம்பித்து 8ம் திகதி காலை 6.30 மணிக்கு விசேட திருவிழா திருப்பலியுடன் நிறைவடைய இருக்கின்றது.

எதிர் வரும் 5ம் திகதி மாலை திருச்செபமாலையுடன் ஆரம்பிக்கும் அமல உற்பவ திருவிழா ஆராதனைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அன்னையின் திருவிழாக்காலங்களான 5ம், 6ம், 7ம் மற்றும் 8ஆம் திகதிகளில் பக்தர்கள் மடுத்திருத்தலத்திற்கு சென்று திரும்புவதனை இலகுபடுத்தும் பொருட்டு மடுச் சந்தியில் இருந்து மடுதேவாலயம் வரையும் விசேட போக்குவரத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இதற்காக இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும் திருவிழா காலங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரைக்கும் மேற்படி சேவைகள் இடம்பெறும் எனவும் திருத்தலத்திற்குப் பொறுப்பான பரிபாலகர் அருட்தந்தை டெஸ்மன் குலாஸ் அடிகளார் தெரிவிக்கின்றார்.

இதே வேளை குறித்த திருநாட் காலங்களில் பக்தர்கள் இரவு நேரங்களில் மடுத்திருத்தலத்தில் தங்கியிருந்து ஆன்மீக கடமைகளிலும், ஆராதனைகளிலும் ஈடுபடுவதற்கான அனுமதியினை படைத்தரப்பு வழங்கியிருப்பதாகவும் அருட்தந்தை தெரிவித்திருக்கின்றார்.

இது இவ்வாறிருக்க திருவிழா தினமாகிய 8ம் திகதி மாலை ஆறுமணிக்கு முன்பதாக பக்தர்கள் திருத்தல சூழலை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அருட்தந்தை மடுத்திருத்தலத்திற்கு செல்ல இருக்கும் பக்த அடியார்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply