ஐ.தே.கட்சியும் ஜே.வி.பியும் மேற்குலகின் சதிவலையில் வீழ்ந்துள்ளன

பிராந்தியத்தில் ஒரு ஸ்திரமற்ற நிலையை உருவாக்கவும், புதிய ஆக்கிரமிப்புப் போக்கினைக் கடைப்பிடிக்கவும் மேற்குலக சக்திகள் சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளன. மேற்குலகின் இந்த சதிவலையில் ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பியும் வீழ்ந்துள்ளது மாத்திரமல்லாமல் அதில் சரத் பொன்சேகாவையும் சிக்கவைத்துள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

இந்தச் சதிவலைக்கு இடமளிக்காமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலுவுடன் உள்ளதோடு மக்களும் ஓர் எழுச்சியுடன் காணப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் மைத்திரிபால சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மகாவலி மையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு ஜனாதிபதி பாரிய வெற்றி யைப் பெறுவார். மக்களின் பொதுவான எதிர்பார்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான்.

ஜனாதிபதி முன்னணியிலிருக்கும் தூரத்தையும் எதிர்க்கட்சி வேட்பாளர் பின்னடைவில் உள்ள தூரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எதிர்க்கட்சி வேட்பாளர் ஜனாதிபதியை நெருங்கவே முடியாது. ஜனாதிபதிக்கு எந்தச் சவாலும் கிடையாது.

அதேநேரம் போட்டியும் இல்லை. மக்களின் ஏகோபித்த ஆதரவில் ஜனாதிபதி மீண்டும் அமோக வெற்றியீட்டுவார். நாட்டின் பிரதான பிரச்சினையைத் தீர்த்ததைப் போல் ஏனைய பிரச்சினைகளையும் ஜனாதிபதி தீர்த்து வைப்பார். ஜே.வி.பியும் ஐ.தே.க.வும் சந்தர்ப்பவாத கூட்டணியொன்றை அமைத்துள்ளன.

‘இந்து’ பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் இதுபற்றி விபரிக்கப் பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால, அன்று புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு ஆயுதங்களை வழங்கிய மேற்குலக சக்திகளே இன்று இலங்கையில் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், அந்தச் சூழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் வீழ்ந்து நாட்டை குழப்புவதாகக் கூறினார்.

கட்சித் தாவல் கிடையாது

அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் கட்சிமாறப் போவதாக இணையத்தளங்களில் செய்தி வெளியிடுகிறார்கள். இது உண்மைக்குப் புறம்பானது. அமைச்சர்கள், எம்.பிக்கள் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம். கட்சிமாறும் பேச்சுக்கே இடமில்லை. எதிர்க்கட்சியால் எம்மைக் குழப்ப முடியாது என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்கள் டலஸ் அழகப்பெரும, துமிந்த திசாநாயக்க, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply