ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் : ஜனாதிபதி

நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் நாட்டை முன்னேற்றும் தனது உண்மையான பொருளாதாரக் கொள்கையை நாட்டிற்கு முன்வைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

“திருடர்களைப் பிடிப்போம்” போன்ற பழைய அரசியல் கோசங்கள் இன்று நாட்டுக்கு செல்லுபடியாகாது என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் தமது எதிர்காலத்தைக் கோஷமிடும் தலைவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, புத்தர் கூறியது போன்று தமது எதிர்காலத்தைப் பாதிக்கும் விடயங்கள் குறித்து தர்க்க ரீதியாக நோக்கி புத்திசாலித்தனமாக ஆராய்ந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் செ (11) நடைபெற்ற அனுராதபுரம் மாவட்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் ஏராளமான தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டதுடன் அவர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

”பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் நாடு நாசமடையும். ரஜரட்ட ராஜ்ஜியம் பலம் வாய்ந்ததாக இருந்தது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் அந்த இராஜ்ஜியம் வீழ்ந்தது. 2022 இல் அதேநிலை ஏற்பட்டது. மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. நான் தேடிச் செல்லவில்லை. யாரும் இல்லாததால் எனக்குப் பொறுப்பேற்கச் சொன்னார்கள்.

பொருளாதாரம் இன்றேல் நாட்டில் அரசியல் எதிர்காலம் ஒன்று இருக்காது. வரலாற்றில் ஒருபோதும் நிகழாதவாறு அனைத்து கட்சிகளையும் இணைத்து செயற்பட்டோம். அதன் பலன் கிடைத்துள்ளது. டொலர் விலை 300 ரூபா வரை குறைந்துள்ளது.

முன்னர், டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி 380 ரூபாவாக இருந்தது.பொருட்களின் விலைகள் இரண்டு மடங்காக இருந்தது. எமது வருமானம் இரண்டு மடங்காக இருக்கவில்லை. இந்த நிலையில் ஐஎம்எப் இடம் சென்றோம். நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. பணம் அச்சிடுவதும் கடன்பெறுவதும் தடுக்கப்பட்டது.

கையையும் காலையும் கட்டி வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான பணத்தை தேட நேரிட்டது. இந்த நிலையில் நாம் முதற்பணியாக அரச செலவுகளை குறைத்தோம். இரண்டாவது வருடம் நிலைமை சற்று கடினமாக இருந்தது. வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். வரியை அதிகரித்த போது அனைவரும் எம்மை ஏசினார்கள். பொருட்களின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. நாம் எதிர்பார்க்கும் மட்டத்திற்கு இன்னும் விலைகள் குறையவில்லை. அரச மற்றும் தனியார் முறை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

பொருளாதர ஸ்தீர நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் வீழ்ச்சி ஏற்படலாம். ஓரிரு வருடங்களில் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். உங்கள் எதிர்காலம் என்ன என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இது. ஸ்தீர நிலையை ஏற்படுத்துவதா அல்லது மீள வீழ்வதா என தீர்மானிக்க வேண்டும். திருடர்களை எப்பொழுதும் பிடிக்கலாம். இன்றுள்ள பிரதான பிரச்சினை பொருளாதார ஸ்தீரநிலையாகும். இறக்குமதிக்காக தினமும் கடன்பெற முடியாது. பெற்ற கடனை மீளச் செலுத்த 2042 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. எனவே ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரித்து வருமானம் உயரும் போது வரிச்சுமையும் குறையும். 24 மணி நேரத்தில் அது நிகழாது. இரண்டு மூன்று வருடங்கள் செல்லும். நிவாரணம் வழங்கும் செயற்பாட்டை அடுத்த வருடம் மேற்கொள்ளலாம். உணவு ஏற்றுமதி மேற்கொள்ளலாம். நெல் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்.

முதலீட்டு வலயங்களை அதிகரிக்க வேண்டும். எண்ணெய் குதங்களை இப்பகுதிக்கு கொண்டு வர உள்ளோம். இப்பகுதி முன்னேற்றப்படும். இதில் தான் எதிர்கால முன்னேற்றம் தங்கியுள்ளது. இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கப்படும்.

அனைத்தையும் இலவசமாக வழங்குவதாக சஜித் சொல்கிறார். சில நாட்களில் தலைவலியையும் இலவசமாக தருவார். அநுர ஏற்றுமதிப் பொருளாதரம் பற்றி பேசினாலும், இறக்குமதி பொருளாதாரம் பற்றி சுனில் ஹந்துன்னெத்தி கூறுகிறார். கோசம் எழுப்புபவர்களுக்கு உங்கள் எதிர்காலத்தை ஒப்படைக்காதீர்கள். பொய் செல்பவர்களிடம் ஏமாறாதீர்கள். உண்மை நிலைய ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள்.” என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் அலி சப்ரி:

”இன்றிருப்பது நாம் 2019 இல் இருந்த நாடல்ல. நாம் மேற்கொள்ளும் எந்தச் செயற்பாட்டிற்கும் எதிர்க்கட்சி எந்தப் பாராட்டையும் தெரிவிப்பதில்லை. அவர்கள் இந்த முழு விவகாரத்தையும் தவறாகத்தான் பார்க்கிறார்கள். “நாம் நரகத்தின் இடைவேளையில் இருக்கிறோம்.” என எதிரணி சொன்ன விடயம் உண்மைதான். நாங்கள் மிகவும் கடினமான பயணத்தில் இருக்கிறோம். இதே பாதையில் சென்றால் மீளலாம். கொஞ்சம் நகர்ந்தாலும் உடைந்து விழும்.

இந்தப் பிரச்சினையை சஜித் பிரேமதாச சிறுபிள்ளைத்தனமாகத் தீர்க்க முயற்சிக்கிறார். கடன் நிலைத்தன்மை தொடர்பில் மீள பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று திசைகாட்டி கூறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு எமக்கு இரண்டு வருடம் சென்றது. அவர்களின் பேச்சுவார்த்தையினால் அடுத்த 5 மாதங்களில் எமக்குக் கிடைக்க இருக்கும் 1.3 பில்லியன் டொலர் நிறுத்தப்படும்.. டொலரின் பெறுமதி 400 ரூபாயாக உயரும். அடுத்து என்ன நடக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்துபார்க்கலாம்.

மக்களை ஏமாற்ற முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எப்போதும் கூறிவருகிறார். அவர் பயமின்றி கடினமான முடிவுகளை எடுத்தார்.

அன்று சித்திரம் வரைந்த இளைஞர்கள் தான் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினார்கள். உணர்வுபூர்வமாக செயற்படாமல் சிந்தித்து செயற்பட வேண்டும். அரசுக்குக் கிடைக்கும் 70 வீத வருமானம், அரச ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றுக்கே செலவாகிறது. திருட்டு பற்றி சில வேட்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். திருடிய பணம் கிடைக்கும் வரை எத்தனை வருடங்கள் காத்திருக்கப் போகிறீர்கள். இரண்டு அடி முன்னோக்கிச் சென்று ஒரு அடி பின்னோக்கிச் செல்லாது ஸ்தீரமான நாட்டை உருவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்” என்றார்.

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க:

இந்த நாட்டி பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கும் செயற்பாடு தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த பொருளாதார வீழ்ச்சியால் நீங்கள் அனைவரும் சிக்கலில் இருந்ததைப் போலவே, பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரப்படுத்த அரசாங்கம் எடுத்த வேலைத் திட்டத்தின் போதும் நீங்கள் பாதிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம். அந்தப் பணியை அரசாங்கத்தின் பொறுப்பாக ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி நீங்கள் அனைவரும் வாழக்கூடிய நாட்டை மீண்டும் உருவாக்கியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய திட்டத்தை வெற்றியடையச் செய்வதில் அவர் வெற்றி பெற்றார்.

மேலும், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். இதற்கு முன் இந்த நாட்டில் அப்படி ஒரு நிலை இருந்ததில்லை. இன்று ஒவ்வொரு அரசியல்வாதியும், அரசு அதிகாரிகளும் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு எந்த அரசியல் தரப்பும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை இவ்வளவு பரந்த அளவில் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த முடியாது. இந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சகல விடயங்களையும் சட்டமாக்கி நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்னணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாரித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி அளித்த பதில்கள் பின்வருமாறு:

கேள்வி: அநுராபுரத்தில் வாகன திருத்தும் பணிகளுக்கு பயிற்றப்பட்ட ஊழியர் தட்டுப்பாடு காணப்படுகிறது. உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகமாக இருக்கின்றன.அதற்கு என்ன தீர்வு வழங்குவீர்?

பதில்: பலர் வெளிநாடு சென்றுள்ளனர். ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற தொழிலாளர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கை ஆரம்பிப்போம். உதிரிப்பாகங்களை இங்கு உற்பத்தி செய்வது இலாபகரமானதாக இருந்தால் இங்கு மேற்கொள்ளலாம். ஆனால் சலுகை வழங்குவது கஷ்டம். ஆனால், அடுத்த வருடம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும்.

கேள்வி : மோசடி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்தீர்கள். திருடர்களைப் பிடிப்பதாகவும் திருடிய பணத்தை கொண்டு வருவதாகவும் சில வேட்பாளர்கள் கூறுகிறார்கள். சட்டத்தை கையில் எடுத்து அவ்வாறு செய்ய முடியுமா?

பதில்: அநுரவும் சஜித்தும் திருடர்களை பிடிப்பதாக சொல்கிறார்கள். பிடிக்க இருக்கும் திருடர்கள் யார்? தம்முடன் இருப்பவர்கள் அல்ல. அரசாங்கத்தில் இருப்பவர்களை தான் திருடர் என்கிறார்கள். ஜி.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா போன்றோர் இருக்கிறார்கள் பிடித்துக் கொள்ளுங்கள். நான் பிரதமராக இருந்த போது திருடர்களைப் பிடிக்க பணிப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஜே.வி.பி கோரியது. ஆனந்த விஜேபாலவின் பெயரை அவர்கள் பிரேரித்தனர்.

அவர் சட்டத்தரணியும் அல்ல. பொலிஸ் அதிகாரியும் அல்ல. அவரை நாம் நியமித்தோம். இப்பொழுது திருடர்களைப் பிடிப்பது பற்றி பேசுகிறார்கள். ஏன் அவரை பிரேரித்தீர்கள். இப்பொழுது மற்றவர்களை குறை கூறிப் பயனில்லை. திருடிய சொத்துக்களை மீளப் பெற சட்டம் கொண்டுவர வேண்டும். அவர்களின் விஞ்ஞாபனத்தில் அதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசியல் மேடைகளில் பொருளாதாரம் பற்றியும் திருடர்களைப் பிடிப்பது பற்றியும் பேசுகின்றனர்.

கேள்வி : வடமத்திய மாகணம் குறைந்த பங்களிப்பையே மொத்த தேசிய உற்பத்திக்கு வழங்குகிறது. முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான திட்டம் பற்றி கூற முடியுமா?

பதில்: தமது பிரதேசத்தில் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக மாகாண சபைகளைப் பலப்படுத்துவோம். 9 மாகாண சபைகளையும் பலப்படுத்துவோம். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட நடவடிக்கை எடுப்போம். விவசாயம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

கேள்வி : தொழில் முயற்சியாளர்கள் என்ற வகையில் கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கு உங்களுக்கு நன்றி. தொழில்முயற்சியாளர்கள் தொழில்பதிவின் போது ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா?

பதில்: வர்த்தகம் ஆரம்பிக்கையில் அனைத்து துறைகளையும் இணைத்து ஆலோசனை சேவை வழங்க இருக்கிறோம். வர்த்தகமொன்றை ஆரம்பிக்கும் போது அது தொடர்பில் வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கலாம். உங்களுக்கு எவ்வாறான உதவி வழங்கலாம் என கவனிக்கலாம். சுயதொழில் பெற உதவி அளிக்கவும் முடியும்.

கேள்வி: தொழில் முயற்சியாளர்கள் என்ற வகையில் நாம் ஊழியர்களுக்கு சிறந்த சம்பளத்தை வழங்கினாலும் அவர்கள் எந்தநாளும் கடனிலே உள்ளனர். பிள்ளைகளின் தனியார் வகுப்புகளுக்கு அவர்கள் அதிகம் செலவிடுகின்றனர். டியுசன் முறை தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியும்? அத்தோடு ஹோட்டல்கள் இருக்கும் காணிகளுக்கு காணி உறுதி வழங்க முடியுமா?

பதில்: எமது கல்வி முறையில் உள்ள குறைபாட்டினால் தான் டியுசன் பலமடைந்துள்ளது. முன்பெல்லாம் சில பாடங்கள் தொடர்பில் மேலதிகமாக அறிவதற்காக மேலதிக வகுப்புகளுக்கு பிள்ளைகளைஅனுப்பினார்கள். முன்பு டியுசன் வகுப்புகள் குறைவாகவே இருந்தன. ஆனால் கல்வித் துறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசியர்கள் உள்ளிட்ட அனைவரையும் இணைத்து இந்தப் பிரச்சினை தொடர்பில் செயற்பட வேண்டும்.

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்யும் போது பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை. எனவே இவை அனைத்தையும் சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. உறுமய திட்டத்தின் பின்னர் 99 வருடத்திற்கு அல்லது நீணட காலத்திற்கு குத்தகை காணிகளை வழங்க இருக்கிறோம்.

கேள்வி : சீகிரிய, தம்புள்ள போன்று ஹபரணயிலும் சுற்றுலா வலயம் அமைக்க முடியுமா? ஹோட்டல்கள், வீடுகளை அடிப்படையாகக் கொண்ட ஹோட்டல்கள் பெருமளவில் உள்ளன. அவற்றுக்கு காணி உறுதி கிடையாது. அதற்கும் தீர்வு வழங்கப்படும்.

பதில்: ஹபரண மட்டுமன்றி முழு நாட்டையும் சுற்றுலா வலயமாக்குவேன். 1965 இல் ஜே.ஆர். இராஜாங்க அமைச்சராக இருந்தபோது சுற்றுலா வலயம் தொடர்பில் யோசனை முன்வைத்தார். நாம் இன்றும் மாறவில்லை. நாம் இன்னும் பழைய முறையிலே இருக்கிறோம். எனவே, முழு நாட்டையும் சுற்றுலா வலயமாக மாற்றுவோம்.

கேள்வி: வரி விதிப்பது நல்லது. அதில் மாற்றம் செய்யப்படுமா?

பதில்: வெட் அதிகரிப்பினால் ஏற்பட்ட பிரச்சினையை அறிவேன். வருமான வரி தொடர்பில் முறைமை ஒன்றை தயாரித்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி மீளாய்வு செய்ய கோரியுள்ளோம். அதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேவையான போது மீளாய்வு செய்து செயற்படும் வகையில் நிபந்தனைகள் இடப்பட்டுள்ளன. இது தெரியாமல் சிலர் குரங்கு போல பாய்ந்து செல்கின்றனர். ” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply