மனோ கணேசனின் கோரிக்கையை நல்லதம்பி ஸ்ரீகாந்தா நிராகரிப்பு

தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அண்மையில் விடுத்த வேண்டுகோளுக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முழு இலங்கைத் தீவிலும் வாழும் தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அமைவது திண்ணமென தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் கூட்டமைப்பு என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது பற்றிப் பலரும் எமக்கு அறிவுரை கூறத்தலைப்பட்டு விட்டனர் என தெரிவித்த நல்லதம்பி ஸ்ரீகாந்தா, சுயமாகச் சிந்தித்து முடிவு எடுக்கும் திறனை கூட்டமைப்பு இழந்து விடவில்லை; இழக்கவும் மாட்டாது. கூட்டமைப்பு எந்தவோர் அரசியல் அணிக்குள்ளும் சிக்கிக் கொண்டிருக்கவில்லை. எமது கைகள் கட்டிப் பிணைக்கப் பட்டிருக்கவில்லை. அவசரப்படாமல் சுயமாகச் சிந்தித்து நிதானமாக விவாதித்து நாம் முடிவு செய்வோம். இந்த விவகாரத்தில் எமது அணுகுமுறை தென்னிலங்கை வாழ் தமிழ் மக்கள் வேறு, வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் வேறு என்ற தவறான அடிப்படையில் அமைய முடியாது. ஒட்டுமொத்தமாக முழு இலங்கைத் தீவிலும் வாழும் தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே நாம் திடமான தொரு முடிவை எடுப்போம் என்றார்.

தென்னிலங்கை வாழும் தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்திற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்பட விருக்கும் சரத் பொன்சேகாவிற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவேண்டும். வடக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அடுத்து இறுதிமுடிவு தேர்தல் நியமனத் தினத்திற்கு முன் அறிவிக்கப்படும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியினது அரசியல் குழு முடிவு எடுத்துள்ளதாக கொழும்பு கிரான்ட் ஒரியன்டல் ஹோட்டலில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மனோ கணேசன் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply