ஐ.நாவில் இலங்கை குறித்த தீர்மானத்தை காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளியுங்கள் புதிய அரசாங்கத்திடம் 25 சிவில் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளித்தல் உள்ளடங்கலாக ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக நாட்டில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளைப் புதிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என 25 சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம், சட்டம் மற்றும் சமூக நிதியம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, இனக்கற்கைளுக்கான சர்வதேச நிலையம் உள்ளிட்ட 25 அமைப்புக்கள் ஒன்றிணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் நியமனத்தை இலங்கையின் அரசியல் மாற்றத்தின் மிகமுக்கிய மைல்கல்லாகக் கருதுகிறோம். தேர்தலும், ஆட்சி மாற்றமும் அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.

நாடு இப்போது பாராளுமன்றத்தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. நாட்டை ஜனநாயகப் பாதையில் கொண்டுசெல்வதாகவும், ஊழலை இல்லாதொழிப்பதாகவும், தனக்கு வாக்களிக்காதோர் உள்ளடங்கலாக நாட்டின் பிரஜைகள் சகலருக்கும் ஜனாதிபதியாக செயற்படுவதாகவும் அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுயளித்திருந்தார். அதுமாத்திரமன்றி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் ‘அரகலய’ போராட்டத்தின் ஊடாக மக்களால் வலியுறுத்தப்பட்ட கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பின்தங்கிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் என நம்புகிறோம்.

அதேவேளை அனைவருக்குமான நீதியை நிலைநாட்டுவதை முன்னிறுத்தி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து, அதிகாரப்பகிர்வை வழங்கக்கூடிய புதிய அரசியமைப்பை உருவாக்கல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல், சகல இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல், பொது ஒழுங்கைப் பேணுவதற்கும் பொலிஸ் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கும் இராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுவரும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்தல், போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளித்தல் ஆகிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என அக்கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply