`மக்கள் விடுதலை இராணுவம்` புதிய போருக்கான அறைகூவல்
இலங்கையில் போர் முடிவடைந்து விட்டது என்று அரசு அறிவித்து 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் அங்கு மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிப்பதற்கான சூழல் தோன்றி உள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. மக்கள் விடுதலை படை [ People’s Liberation Army – PLA ] என்ற பெயரில் கிழக்கில் உருவாகியுள்ள புதிய இயக்கம் ஒன்று இலங்கையில் ஆயுதப் பேராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக `த ரைம்ஸ்` [The Times ] என்ற பிரித்தானிய நாளிதழ் தனது செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
“தமிழர்களின் தனித் தாயமான தமிழீழத்தை அடையும் வரையும் இலங்கை அரச மற்றும் படையினரின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக நான்கு மாதங்களுக்கு முன்னதாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது” எனவும், “இந்தப் போராட்டம் இப்போதைக்கு ஓயாது” எனவும் அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கோணேஸ் தம்மிடம் சொன்னதாக `த ரைம்ஸ்` இணையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாதுகாப்பான மறைவிடம் ஒன்றில் கடந்த வாரம் `த ரைம்ஸ்` ஊடகவியலாளர் கோணேசைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
“கடந்த மே மாதத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் ‘மக்கள் விடுதலைப் படை’யை ஒருங்கிணைத்துக் கட்டியெழுப்பி உள்ளோம். விரைவிலேயே நடவடிக்கைகளில் இறங்குவோம். ஜனநாயக, பொதுவுடமை தமிழ் ஈழத்தை அமைப்பே எமது இலக்கு” என கோணேஸ் விபரித்தார்.
தமது இயக்கத்தில் இப்போது 300 பேர் வரையிலான தீவிர செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்ன கோணேஸ், வன்னித் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 280,000 பேரில் இருந்து 5,000 தொண்டர்கள் வரையில் விரைவில் தம்மோடு இணைத்துக் கொள்வார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த இயக்கம் விடுதலைப் புலிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என வலியுறுத்திய கோணேஸ், “மக்கள் விடுதலைப் படை”யின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் போராளிகளும் தமது இயக்கத்தில் இணைந்து கொள்ளலாம் என விளக்கினார்.
இப்போது தனது 40 வயதுகளில் இருக்கும் கோணேஸ் – தான் 1980-களில் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகத் தெரிவித்தாராம். அவரது பயிற்சியாளர்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்.
“பாலஸ்தீன விடுதலைப் படை, கியூபா மற்றும் இந்திய மார்க்சிஸ்டுகள் ஆகியோருடன் நாங்கள் இப்போதும் தொடர்பில் இருக்கின்றோம். அவர்களும் எங்களைப் போன்றே தமது உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்” எனவும் கோணேஸ் தெரிவித்தார்.
“இங்கே எங்களது எதிரி இலங்கை அரசு மட்டும் தான். நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே சண்டையிடுகிறோம். நாங்கள் அனைத்துலக சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்லர். இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் அவர்கள் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பு” என்று தமது நோக்கத்தை கோணேஸ் விளக்கினாரென `த ரைம்ஸ் ஒன்லைன்` அச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மே 18ல் புலிகளுக்கு நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் முடிவுகளை கண்ட பின்புமா `மக்கள் விடுதலை இராணுவம்` புதிய போருக்கு அறைகூவல் விடுகிறதுதென விரக்தியுடன் கேள்வி எழுப்புகின்றனர் அண்மையில் செட்டிக்குளம் முகாம் இருந்து வீடு திரும்பிய பல மக்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply