அமெரிக்க தூதகரத்தின் எச்சரிக்கை: பாதுகாப்பை பலப்படுத்திய இலங்கை

அறுகம்பேவில் உள்ள சுற்றுலாத் தளங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கொழும்பு உட்பட நாட்டில் பிரபல்யமான சுற்றுலாத் தளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக இந்திய புலனாய்வுத் துறையால் தகவல்கள் வழங்கப்பட்டும் குறித்து தாக்குதலை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கமும், பாதுகாப்பு துறையும் தவறிவிட்டன.

இந்த விவகாரம் இன்றும் அரசியல் அரங்கில் பிரதான பேசுபொருளாக உள்ளதுடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மீண்டும் புதிய ஆணைக்குழுவொன்றை நியமித்து ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் இலங்கைக்கு மிகப்பெரிய பாடகமாக உள்ளதால் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தொடர்பில் தீவிர புலனாய்வுகளை நடத்த அரசாங்கம் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

அதேபோன்று கொழும்பு உட்பட நாட்டின் பிரதான சுற்றுலாத் தளங்கள் குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் செல்லும் சுற்றுலாத் தளங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஆலோசனைகள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

என்றாலும், கொழும்பில் எவ்விதமான அச்சுறுத்தல்களும் இல்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதரகத்தின் இந்த அறிவிப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply