தொடரும் நாட்டு அரிசி தட்டுப்பாடு: அசௌகரியத்தில் நுகர்வோர்
நாடளாவிய ரீதியில் நாட்டு அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு அதிகரித்து வருவதுடன் சில விற்பனையாளர்கள் நாட்டு அரிசியுடன் கீரி சம்பா அரிசியை விலைக்கு வாங்குமாறு கூறுவதால் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தற்போது தீபாவளி பண்டிகை காலம் ஆரம்பித்துள்ளதால் , அதனை முன்னிட்டு நாட்டு அரிசிக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
நாட்டு அரிசியை பெற்றுக் கொள்வதற்காக சந்தைக்கு செல்லும் நுகர்வோருக்கு, சில விற்பனையாளர்கள் நாட்டு அரிசி 10 கிலோவுடன் கீரி சம்பா 5 கிலோவை பெற்றுக்கொள்ளுமாறு கூறுவதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
தற்போது பெரிய அளவிலான நாட்டு அரிசி தொகை மொத்த வியாபாரிகளுக்கு முறையாக வழங்கப்படாத காரணத்தினால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சில விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தங்களுக்கு நாட்டு அரிசியை வழங்கும்போது, அதற்கு இணையான கீரி சம்பா அரிசியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிப்பதால் நாட்டு அரிசியை கொள்வனவு செய்யும் போது கீரி சம்பா அரிசியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு கொள்வனவு செய்யும் கீரி சம்பா அரிசியை சரியாக விற்பனை செய்து கொள்ள முடியவில்லை எனவும் சில அரிசி வியாபாரிகள் விளக்கமளித்தனர்.
எவ்வாறாயினும், நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று (28) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள அரிசி ஆலைகளில் உள்ள அரிசி மற்றும் நெல் இருப்புக்கள் குறித்த தரவுகளை கடந்த 27ஆம் திகதி மற்றும் 26ஆம் திகதிகளில் பெற்றுக்கொள்ள நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்திருந்தது.
நாட்டு, வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி உள்ளிட்ட பல்வேறு அரிசி வகைகளுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply