அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை பாதுகாப்புத்துறை அமைச்சரை அதிரடியாக நீக்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட் அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காசாமுனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதே போல் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தும் ஹிஸ்புல்லா அமைப்பினரோடும் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. மேலும் ஈரான் மீதும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த சூழலில், இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்ட் அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாததால், யோவ் காலண்ட்டை பதவிநீக்கம் செய்ததாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதையடுத்து, இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த காட்ஸ், பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார் எனவும், வெளியுறவுத்துறை மந்திரியாக கிதியோன் பதவியேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிநீக்க நடவடிக்கை குறித்து பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், “போரின் ஆரம்பகட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சரின் செயல்பாடுகள் நல்ல பலன்களை கொடுத்தன. அவர் மீது நம்பிக்கை இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக இல்லை.
போரை வழிநடத்துவது குறித்து மந்திரிசபை எடுத்த முடிவுகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒத்துப்போகவில்லை. இதை சரிசெய்ய நான் நிறைய முயற்சி செய்தேன். ஆனால் எங்களுக்கு இடையிலான பிளவு மேலும் அதிகரித்துவிட்டது. இதன் பலனை எங்கள் எதிரிகள் அனுபவித்தனர்.
இது மேலும் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. எனவே, பாதுகாப்புத்துறை மந்திரியின் பதவிக்காலத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
பதவிநீக்கத்தை தொடர்ந்து யோவ் காலண்ட், ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேலின் பாதுகாப்பு என்பதே எப்போதும் எனது வாழ்வின் முக்கியமான லட்சியமாக இருந்து வருகிறது. இனிமேலும் அப்படியே இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply