தேர்தல் தினத்தன்று IMF குழு இலங்கைக்கு
7ஆவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் உயரிய குழு இலங்கைக்கு விஜயம் செய்கிறது. இந்த விஜயத்தின் அடுத்த கட்ட கடன வசதி குறித்து அரச தரப்பினருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளது.
குறிப்பாக நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் சமகால மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பில் அரசாங்கத்தின் ஈடுப்பாடுகளையும் கொழும்பு விஜயத்தின் போது நாணய நிதிய குழு அவதானத்திற்கு உட்படுத்த உள்ளது. அது மாத்திரமின்றி அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்ட வரைபை நாணய நிதியம் கோரியுள்ளது.
வாஷிங்கடனில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் சார்பில் கலந்துக்கொண்டிருந்த மத்திய வங்கிய ஆளுநர் கலாநிதி நந்தலல் வீரசிங்க மற்றும் திறைச்சேறி செயலாளர் மஹிந்த சிறிவர்தன உறுதியளித்திருந்தனர்.
இதன் பிரகாரம் மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான மீளாய்வுகளை நிறைவுப்படுத்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியதுள்ளது. இதற்கு அமையவே நாணய நிதியத்தின் உயரிய குழு இலங்கை வருகின்றது.
இலங்கையின் ஒப்புதல்களின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற வாஷிங்டன் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இருப்பினும் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் குறித்தும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் வாஷிங்டன் பேச்சுவார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இலங்கை விஜயத்தை சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கான அர்ப்பணிப்பை இலங்கையின் புதிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் இலங்கைக்கு சிறந்த பலன்கள் கிடைத்துள்ளன.
விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்கள், பொருளாதார மற்றும் நிதிக் கொள்கை அமுலாக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply