இலங்கை – இந்திய இணைப்புப் பாலமாகவும், தமிழ் – சிங்கள உறவுப்பாலமாகவும் விளங்கும் “ஏ-14” நெடுஞ்சாலை: மக்கள் காதர்
ஆங்கிலேயர் எம்மை ஆண்டபோது முதலில் நாட்டின் பாதைகளைத்தான் சீரமைத்தனர். அந்த திட்டத்தில் உருவானதுதான் தலைமன்னார் – மதவாச்சி `ஏ-14` நெடுஞ்சாலையாகும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாதை அவர்களால் உருவாக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் மன்னார் பட்டினத்தில் தளம் அமைத்து மாவட்டத்தை ஆண்டு வந்த போது முதலில் தரைவழிப் பாதையையும், பின்னர் தொடரூந்துப் பாதைகளையும் உருவாக்கினர். அதன்படி முதன் முதலில் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஏ-14 தரைவழிப் பாதையாகும். அதற்கு முன்னர் சிலாவத்துறை – புத்தளம் கரையோரப் பாதையே மன்னார் – புத்தளம் மக்களின் போக்குவரத்துப் பாதையாக இருந்து வந்தது.
இப்பாதை மன்னாரில் இருந்து வங்காலை, நானாட்டான், அரிப்புத்துறை, கொண்டச்சி, முள்ளிக்குளம், வில்பத்து வனத்தின் ஊடாக, கரைத்தீவு என்று சுமார் 75 கிலோ மீற்றர்வரை நீண்டு சென்று புத்தளம் நகரை அடைந்தது. இதன் ஊடாக பெரும் காடுகளும், ஒரு சில கிராமங்களுமே தென்பட்டன.
தற்போது சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பிரசித்தி பெற்ற மர முந்திரிகைத் தோட்டங்கள் கொண்டச்சி கிராமத்தின் காடுகளில் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்டு நாட்டிற்குப் பெருமளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்தன.
ஏ-14 நெடுஞ்சாலை தலைமன்னார் இறங்கு துறையில் ஆரம்பமாகி முறையே தலைமன்னார் ஸ்டேசன், பேசாலை, தோட்டவெளி, மன்னார், முருங்கள், மடுவீதி, பறையன்ஆலங்குளம், செட்டிகுளம், மாங்குளம், மதவாச்சி சந்தி, மதவாச்சி நகர், என்று சுமார் நூறு கிலோமீற்றறுக்கு அதிகமாகச் சென்று கொழும்புடன் தொடர்பை ஏற்படுத்துகின்றது. இதன் மற்றொரு பாதையான தலைமன்னார் துறை முதல் மதவாச்சி வரையிலான தொடரூந்துப் பாதைகள் 1913இல் அமைக்கப்பட்டன.
ஆங்கிலேயர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும், நிரந்தர வாழ்விடங்களுக்காகவும் தங்கள் ஆளுமையை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதற்காகவும் இப் பாதைகளை அமைத்தனர். இலங்கையில் அபரீதமாக விளைந்த தேயிலை, இறப்பர், தெங்கு, மற்றும் கறுவா பயிர்ச்செய்கை என்பவற்றின் ஊடாக கோடான கோடி அன்னியச் செலாவணியைப் பெற்றுக் கொள்வதற்காகவும் இப் பாதைகளை அவசர அவசரமாக அமைத்துக் கொண்டனர்.
இதற்காக பல இலட்சக் கணக்கான தென் இந்தியத் தமிழர்களை இங்கு கொண்டு வந்து கொத்தடிமைகளாக சிய கொட்டில் லயங்களுக்குள் முடக்கிவைத்து தங்கள் வர்த்தக மேம்பாட்டை விருத்தி செய்தனர்.
முதலில் தலைமன்னார் துறைவரை மன்னார் தீவின் தலைநகர், மன்னார் பட்டினம்வரை இப்பாதையை அமைத்தனர். மன்னார் பட்டினத்தில் இருந்து இலங்கை பெருநிலப்பரப்பை பிரிக்கும் சுமார் நாலரைக்கிலோமீற்றர் நீளமான பறவைக்கடலை கடப்பதற்காக பாலம் ஒன்றையும் நிறுவினர். இதற்காக 1928இல் மன்னார் அரச அதிபரால் அடிக்கல் நடப்பட்டு 1930இல் அப்போதைய பிரித்தானிய ஆளுனரினால் அப்பாலம் திறந்துவைக்கப்பட்டது. அது முதல் இன்றுவரை இப்பாலம் மன்னார் தாம்போதி பாலம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் தாம்போதி 1964 மார்கழித்திங்கள் 26ஆம் நாள் நள்ளிரவில் இலங்கையில் நிகழ்ந்த கொடிய சூறாவழியால் முற்றாகத தகர்ந்தது. இப்பாதையில் பல இடங்களில் உடைப்பு எடுத்தது. எனினும் ஒருவருடத்தின் பின் இலங்கை இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினரால் முற்றாக சீரமைக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்றுவந்த உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக 1990 யூன் மாதம் ஒரு விடிகாலைப் பொழுதில் புலிகளால் மேம்பாலம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. அதன்பின்னர் 1991இல் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசவினால் தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டு 1991ல் அவரே மன்னார் வந்து மேம்பாலத்தைத் திறந்துவைத்தார்.
அன்று முதல் இன்று வரையில் மன்னார் மக்களின் வாழ்வாதாரமாக இந்த தற்காலிக பாலமே இருந்துவந்தது. சென்ற ஆண்டில் யப்பான் அரசு மனமுவந்து கொடுத்த சுமார் 190 கோடி ரூபா செலவில் முற்றிலும் கொங்கிறீற் கலவையினால் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு பாலத்திற்கு மன்னார் சமாதானப் பாலம் என பெயரிடப்பட்டது. தற்போது இப்பாலம் போக்குவரத்திற்கு தயாரான நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் இலங்கையிலேயே மிக நீளமான கடற்பாலம் என்று இலங்கை வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மன்னார் தாம்போதி இதுவாகும்.
இந்த பாலத்தின் ஊடாகவே இலங்கை இந்திய உறவுகள் வலுப் பெற்றதும், தமிழ் சிங்கள குடியேற்றங்கள் நிலை பெற்றதுமாகும். 1990ல் முஸ்லீம்களின் வெளியேற்றத்திற்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் சுமார் நான்காயிரம் சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்து வந்ததாக வரலாறுகள் சொல்கின்றது. இவர்கள் மன்னார் தீவகற்பகத்தில் மன்னார் நகர், சவுத்பார், ஆமைப்படுகை, வங்காலைப்பாடு, பேசாலை, தலைமன்னார் துறை, மாவட்டத்தில் அரிப்புத்துறை, சிலாவத்துறை, விடத்தல்தீவு, அடம்பன், பறையநாலங்குளம், நாச்சிக்குடா ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்தனர்.
தலைமன்னார் துறையில் இருந்து தமிழ் நாடு ராமேஸ்வரம் வழியாக இங்கு அழைத்துவரப்பட்ட பல இலட்சக்கணக்கான தென்னிந்திய கூலிக்குடும்பங்கள் இந்தியாவில் இருந்து “இராமானுஜம்” மற்றும் “இர்வின” என்று பெயர் சூட்டப்பட்ட இரண்டு சரக்குகள் ஏற்றும் கப்பல்கள் மூலம் தினமும் தலைமன்னார் இறங்குதுறைக்கு அழைத்துவரப்பட்டு கால்நடையாகவே சுமார் 300கிலோமீற்றர் தூரத்தை பல நாட்கள் பிரயாணம் செய்து மலையகத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறிய லயங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
வரும் வழியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பல்வேறு நோய்களினால் செத்து மடிந்தனர். பின்னர் 1913ல் தலைமன்னார் மதவாச்சி தொடரூந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அதில் சரக்குகள் ஏற்றும் “கூட்ஸ்” பெட்டிகளில் அடைத்துவைக்கப்பட்டு மலை நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தென் இந்திய மக்கள் 1948ல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் சுமார் 10 நாடாளுமன்ற அங்கத்தவர்களை தெரிவுசெய்து நாடாளுமன்றம் அனுப்பும் சக்தியைப் பெற்றிருந்தனர். இதைக் கண்டு சகித்துக் கொள்ளமுடியாத அப்போதைய ஜக்கிய தேசியக் கட்சி தென் இந்தியர்களின் பிரஜா உரிமையை உடன் ரத்து செய்தது.
இதன் விளைவாக சுமார் ஆறு லட்சம் தென் இந்திய தமிழர்கள் தங்கள் வாழ்விட உரிமையை இழந்ததோடு ஆளும் வலிமையையும் இழந்தனர். இந்த நாட்டை இந்திய தமிழர்கள் ஆள்வதா என்ற காற்புணர்ச்சி உடையவர்கள் இவர்கள் தங்கள் சுய உரிமையை இழந்து மீண்டும் “கள்ளத்தோணிகள்” என்ற நாமம் பெற்றனர்.
ஏ-14 நெடுஞ்சாலை ஊடாகவே மன்னார் மக்கள் நாட்டின் பலவேறு பகுதிகளுக்கும் சென்று அரச ஊழியம், தொழில் வாய்ப்பு, வர்த்தகம், விவசாயம், மீன்பிடி என்பனவற்றில் ஈடுபட்டு பெரும் செல்வம் சேர்த்தனர். அது போலவே தென் இலங்கைச் சிங்களவர்களும் இங்கு வந்து மீன்பிடி, கருவாடு பதனிடல், வாகனம் திருத்துதல், சிறு கைத்தொழில்கள், அரச ஊழியம் என்று பல் தொழில்களிலும் கொக்கி நின்றனர்.
1983ல் இடம்பெற்ற உலகம் கண்டும் கேட்டும் இராத திட்டமிட்ட இனப் படு கொலையின் பின்னர் இலங்கையில் நடைபெற்றுவந்த மூன்று தசாப்த யுத்தத்தின் விளைவாக நாட்டில் தமிழ் சிங்கள முஸ்லீம் உறவுகள் சீர்குலைந்து அழிந்து போனதுடன் மன்னாரில் பல்வேறு வளங்களும் அழிந்து போயின. அவற்றில் முதலில் தலைமன்னார் மதவாச்சி தொடரூந்து சேவைகள், இரும்புப்பாதைகள், நிலையங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. 1983லேயே இலங்கை இந்திய கப்பல்சேவைகள் நிறுத்தப்பட்டது. 2006ம் ஆண்டு மதவாச்சியைத்தாண்டி மன்னார் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதே போல் தென்பகுதி மக்கள் இங்குவர முடியாத நிலை ஏற்பட்டது. நாட்டில் தொடர்ந்து அவசரகாலச்சட்டம், கடும் கண்காணிப்பு, இராணு சுற்றிவளைப்பு, இளைஞர் யுவதிகள் தேடல்கள் என ஆரம்பித்து மதவாச்சி முதல் மன்னார் வரையான சுமார் 10 இடங்களில் தடை முகாம்கள் அமைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட மக்களே மன்னார் நகருக்குள் நுழைவதற்கு தங்கள் அடையாள அட்டைகளை நகரின் நுழை வாயிலில் உள்ள கடற்படை காவல் முகாமில் ஒப்படைத்துவிட்டு அவர்கள் தரும் தற்காலிக அட்டையைக் கொண்டு திரியும் அவல நிலை. அதே போல் மாவட்டத்திற்கு வெளியே இருந்து வருபவர்கள் தங்களது அடையாள அட்டைகளுடன் உள்ளுர் பிரமுகர் ஒருவரையும் தனக்கு பிணையாக வைத்து உள்ளே நுளையும் நிலமை. யுத்தம் முடிவுற்று ஆறுமாதங்கள் சென்றபின்பும் இதில் எள்ளளவும் மாற்றம் இருக்கவில்லை இந்நிலையில் அண்மையிலேயே இச்சோதனை நிலைய வடவடிக்கைகளை கைவிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
ஆங்கிலேயர் எம்மிடம் நாட்டை ஒப்படைத்த பின்னர் இந்த ஏ-14 நெடுஞ்சாலை ஒருமுறைகூட முற்றாக திருத்தம் செய்யப்படவில்லை. பாதையின் இருமருங்கிலும் ஆங்கிலேயர்களால் நட்டுவைக்கப்பட்ட நிழல்தரும் ராட்சத மரங்கள் அனைத்தும் உள்ளுர் அரசியல் வாதிகளால் வெட்டிச்சாய்த்து கொள்ளை விலைக்கு விற்கப்பட்டன. சென்ற ஆண்டு இப்பாதையை செப்பனிட்டு கார்பட் பாதையாக மாற்றுவதற்கு சுமார் 25கோடி ரூபாய்கள் வெளிநாட்டு அரசு ஒன்றின் உதவியால் ஒதுக்கப்பட்டது.
தலைமன்னாரில் இருந்து மன்னார் நகரம் வரையான பாதை புனரமைப்பு வேலைகள் அவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று நான்கு ஆண்டுகளின்பின் தற்போது முடிவுற்றுள்ளது. இக்காலங்களில் பல்வேறு ஒப்பந்தக் காரர்களும் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர். பின்னர் மீண்டும் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் முடிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் சுமார் 40 அடி அகலத்தில் கார்பட் போடப்பட்டு இரு வழிப்பாதையாகவும், இருபுறுமும் சுமார் 10 அடி அகலத்தில் நடைபாதையாகவும் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயினும் இப்பாதை சாதாரண தார் பாதையாகவே அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடைபாதையும் அமைக்கப்படவில்லை. குறிப்பாக மன்னார் நகரத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு மட்டும் சுமார் முப்பது அடி தார் பாதையே அமைக்கப்பட்டதுடன் நடைபாதையை அமைப்பதற்காக எந்த ஒரு வீட்டின் மதில்களும் உடைக்கப்படவில்லை. மதில்களை உடைப்பதற்கு வீட்டு உரிமையாளர்கள் எவரும் சம்மதிக்கவும் இல்லை.
இந்த நிலையில் நெருக்கமான பாதையில் தறிகெட்டு அசுர வேகத்தில் ஓடித்திரியும் கனரக வாகனங்கள் பேரூந்துகள், சிற்றூர்திகள், உந்துருளிகள், முச்சக்கர வாகனங்கள், மற்றும் குளிரூட்டப்பட்ட அரசு சார நிறுவனங்களின் வாகனங்கள், அரசியல் பிரமுகர்களின் தொடர் வாகன அணிகள் என்பவற்றினால் மன்னார் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக மிதி வண்டியில் பிரயாணம் செய்ய முடியாதுள்ளதுடன் வயோதிபர்கள், பெண்கள், சிறுவர்கள், மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளடங்களாக சமானிய மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply