உறவினர்களை விடுதலை செய்யக்கோரி வவுனியாவில் பேரணி

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்பும், புலிகள் அமைப்பின் செயற்பாடுகளில் முன்பு பங்கு பற்றினார்கள் என்ற காரணத்துக்காக சிறைகளிலும் சிறப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணையகத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் எதிரே எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை செய்துள்ளனர். ’விடுதலை செய் அல்லது விசாரணை செய்’ எனக்கோரி வவுனியா, அனுராதபுரம், யாழ்ப்பாணம் ஆகிய சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்ற அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு அமைதிப் பேரணியையும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஒழுங்கு செய்திருந்தனர்.

இன்று, மனித உரிமைகள் ஆணையகத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் எதிரே கூடிய இவர்கள் சுலோக அட்டைகளைத் தாங்கியிருந்தார்கள். தமது கோரிக்கையை வெளிப்படுத்தும் மகஜர் ஒன்றினை மனித உரிமைகள் ஆணையக அதிகாரிகளிடம் அவர்கள் கையளித்தனர்.

அதன் பின்னர் வவுனியா புகையிரதநிலைய வீதிவழியாக குருமண்காட்டுச் சந்தியைச் சென்றடைந்து அங்கிருந்து மன்னார் வீதிவழியாக வவுனியா அரச செயலகத்திற்குச் சென்று பேரணி முடிவடைந்தது. விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என அரசாங்கத்தைக் கோரும் மகஜர் ஒன்று வவுனியா அரச செயலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கலந்துகொள்ள வந்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சருடன் பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகவும், இக்கைதிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப அவர்களை பிணையில் விடவும் அல்லது நிரந்தரமாக விடுதலை செய்வதற்கும் நீதி அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

இன்னும் ஒரு மாத காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply