அனைத்து தமிழ் கட்சிகளும் இணைத்த அரசியல் நகர்வு தேவை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களையும் இணைத்து இந்த அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமிழ்ப் பேசும் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகப் போராடி மடிந்த அனைவரையும் நினைவில் நிறுத்தி, எமது இன்றைய அரசியல் நிலைப்பாட்டை இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

எமது முன்னோர் விட்ட தவறுகளாலும், தவறான கணிப்பீட்டாலும், மற்றும் துரோகங்களாலும் எமது மக்களின் ஜனநாயக, அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் பின்னடைந்து, இன்று எமது மக்கள் சொல்லில் அடங்காத துயரத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் சீரழிந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.

இந்த மக்களின் உடனடி விடிவுக்காகவும் எமது மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கோட்பாட்டில் உள்ளோம்.

நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் விடிவுக்காகவும், எமக்கான அரசியல் உரிமைக்காகவும் அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்வதற்கான வழியாகவும் பயன்படுத்த வேண்டும்.

இன்று எல்லாவற்றையும் இழந்து அரசியல் தலைமைத்துவம் இன்றி தமிழ்ச் சமுகம் நிர்க்கதியான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் எம்மக்களின் இழந்த வாழ்வினை மீட்டெடுத்து, எமக்கான உறுதியான அரசியல் தீர்வை தரக்கூடிய கட்சியைப் பின்புலமாக கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை நாம் கண்டறிய வேண்டும்.

இன்று எம் மக்களுக்கு உள்ள அரசியல் ரீதியான ஒரே நம்பிக்கை மாகாண சபை முறைமையாகும். ஆனாலும் இம்மாகாண சபைக்கென பரிந்துரை செய்யப்பட்ட குறைந்தபட்ச 13 ஆவது அரசியல் அதிகாரங்களும் இல்லாத நிலையிலேயே நாம் உள்ளோம்.

தமிழ் மக்களுக்கென கொண்டுவரப்பட்ட மாகாண சபை சுமார் 20 வருடங்களுக்கு பின்பே அம்மக்களினால் அனுபவிக்கக் கிடைத்தது. எனினும், அதற்கான முழுமையான அதிகாரங்கள் இல்லாமலும் சுயாதீனமாக செயற்பட முடியாத அதிகாரக் குறுக்கீடுகளும் உள்ள நிலையிலேயே மாகாண சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இழப்புக்களுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்களின் அபிலாஷைகளையும் ஏக்கங்களையும் பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே நாம் உள்ளோம்.

எனவே தான் இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டு ராஜதந்திர ரீதியில் சிந்தித்து 13 ஆவது அரசியல் அதிகாரங்களை தாண்டிய இன்றைய கால சூழ்நிலைக்கேற்ப எம்மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய அதிகாரங்களுடனான அரசில் தீர்வொன்றினை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நாம் எமது நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாம் இதற்கான அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளோம். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களையும் எம்முடன் இணைத்து இந்த அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு வேண்டி நிற்கின்றோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply