பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க 47 தமிழறிஞர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தலைமையில் உலகத் தமிழ் அறிஞர்கள் எல்லாம் முன்கூட்டியே வருகை தந்து இந்த மாநாட்டினைச் சிறப்பாக நடத்திக்கொடுக்க வேண்டு மென்றும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜுன் திங்கள் இறுதியில் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் முறைப்படி நடைபெற்று வருகின்றன.
இன்றைய கடிதத்தைத் தொடங்குவதற்கு முன்பாக அண்ணா 1968-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுத் துவக்க விழாவில் பேசியதை நினைவூட்ட விரும்புகிறேன்.
நாளைய தினத்திலிருந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் தமிழ் பற்றி உலகத் தமிழ் மாநாட்டில் ஆராய்ச்சி நடத்தவிருக்கிறார்கள். மிகுந்த பண்பாளரும், கல்வித் துறையில் புதுமை கண்டவருமான குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் இந்த மாநாட்டைத் துவக்கி வைக்க வந்துள்ளார்.
உலகத் தமிழ் மாநாடு முதலில் மலேசிய நாட்டில் நடைபெற்றது. இப்போது சென்னைத் திருநகரில் நடைபெறுகிறது. இங்கு பேசிய காமராஜர் முதல் மாநாட்டையே நாம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் என்ன காரணத்தாலேயோ அவர்கள் முந்திக் கொண்டார்கள் என்றார். எப்போதுமே அண்ணன் கொஞ்சம் சோர்ந்திருந்தாலும், தம்பி மிக அக்கறையாயிருந்து காரியமாற்றுவான், அதுபோல முதல் மாநாட்டை அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த மாநாடு அதன் தொடர்ச்சியே தவிர புதிது அல்ல.
அந்த மாநாட்டிற்கு 20 நாட்டுப் பிரதிநிதிகள் வந்திருந்தனர். இப்போது ரஷ்யா போன்ற 30 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வந்திருக்கின்றனர். இந்த நாடுகளுக்கெல்லாம் தமிழ் மொழி அறிமுகமாகியிருக்கிறது. ஆனால் இந்தியாவுக்குள் அது சரிவர அறிமுகமாகவில்லை.
தமிழ் மொழியின் அருமையை ரஷ்ய நாட்டினரும் – செக்கோஸ்லாவிய நாட்டினரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் இங்கே அது சரிவர உணரப்படவில்லை.
தமிழர்களாகிய நாங்கள் எந்த மொழியையும் மதிக்கிறோம்! உலகின் எந்தக் கோடியில் அறிவு இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறோம்! உலகில் எந்தக் கோடியில் இருந்து வருபவர்களானாலும், அவர்களின் அறிவை நாங்கள் மதிக்கிறோம்!
ஆனால் தமிழர்கள் தமக்கு என்று இருப்பதை இழக்க ஒருக்காலும் சம்மதிக்க மாட்டார்கள். “எவ்வளவு அருமையான மொழி உங்களிடமிருக்கும் தமிழ் மொழி” என்று நார்வே நாட்டவரும், இங்கிலாந்து நாட்டவரும், அமெரிக்கரும், ஆஸ்திரேலியரும் இங்கு வந்து கூறும்போது, “அந்த மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம்” என்பதை எண்ணி மகிழ்கிறோம்!
அந்த மொழிக்கு எந்தக் கட்டத்திலானாலும், எந்த நோக்கத்திலானாலும், எப்படிப்பட்டவரானாலும், தகுந்த மரியாதை தர மறுத்தால், அதைத் தமிழினம் பொறுத்துக் கொள்ளாது! ஆழ்கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தால் அதை நாவாய் மூலம் கடக்கலாம். அதைப்போலத் தமிழர்களை அணைத்துச் சென்றால் அவர்கள் எல்லோர்க்கும் தோழர்களாக இருப்பார்கள்.
1967-ம் ஆண்டில் எல்லா நாடுகளையும் ஒன்றுபடச் செய்ய ஐ.நா. மன்றத்தில் பல நாட்டுக் கொடிகளையும் ஒருசேர பறக்க விட்டு ஒற்றுமை பேசப்பட்டாலும், பேசிவிட்டு வெளியே வந்ததும், “எந்த நாடு எந்த நாட்டின் மீது எப்போது படையெடுக்குமோ?” என்ற அச்சம் ஏற்படுகிறது.
ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று எடுத்துச் சொன்ன தமிழன் எவ்வளவு சிறந்த பண்பினைப் பெற்றிருந்தான் என்பதை எண்ணும்போது நெஞ்சம் விம்முகிறது! யாதும் ஊரே – யாவரும் கேளிர் என்று பாடிய புலவர், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றும் அடுத்த அடியில் பாடியிருக்கிறார். நல்லது வர வேண்டுமா? அது நாம்தான் செய்து கொள்ள வேண்டும். கெட்டது வரவேண்டுமா, நாம்தான் வரவழைத்துக் கொள்ள வேண்டும். எனவே தீது வருமோ என்று அய்யப்பாடு கொள்ள வேண்டாம். அது நாமாகத் தேடிக் கொண்டால் தான் வரும். பிறர் தருவதல்ல, தீதும் நன்றும்!
தமிழ் மொழி பற்றி ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இந்த மாநாட்டுக் கருத்தரங்கு மூலம் அந்தத் தமிழ் மொழியின் சிறப்புக்களைப் பலரும் அறியச்செய்து, அதன் வளத்தையும் சிறப்பையும் கண்டு மற்றவர்களும் “இதுவல்லவோ சிறந்த மொழி, இதுவல்லவோ நமது மொழி, இதுவல்லவோ இணைப்பு மொழி, இதுவல்லவோ ஆட்சி மொழி” என்று தமிழ் மொழியை விரும்பி எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் காலம் வரும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
இது அவசரத்தால், ஆத்திரத்தால் ஏற்படாது! தூண்டிலைப் போட்ட பின் மீன் கொத்தும் வரை காத்து இருப்பது போல், இந்தக் காலக் கட்டம் வரும் வரை நாம் காத்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்! தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளபடி காலமும் இடம் பொருளும் அறிந்து செயல்பட வேண்டும்!
நமது தமிழ் உரிய ஏற்றத்தைப் பெறும் சிறப்பை நாம் பெற்றது போலவே, இந்திய மக்களும் பெற்று அதை அரியாசனத்தில் அமர்த்தும் நன்னாளைப் பெறும் உறுதி கொள்வோம்! அதற்கான கருத்துக்களைத் தர இங்கு வந்த அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் வாழ்த்தி வரவேற்போம்!”
இந்த வெண்கலக் குரல் ஒலிக்க; அண்ணா சென்னை கடற்கரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுத் தலைமை உரையில் தன் சங்கநாதத்தை முடித்தவுடன், அங்கே திரண்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் உள்ளங்கள் எல்லாம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றன.
அண்ணாவின் இந்தத் துவக்க விழா உரையினை நெஞ்சிலே ஏந்தி, தற்போது கோவையில் நாம் நடத்தவுள்ள மாநாடு மற்றும் கருத்தரங்குகள் நடைபெறுவதற்கான இடங்களை நானே நேரில் சென்று பார்த்து மனநிறைவுடன் திரும்பியிருக்கிறேன்.
மாநாடு நடைபெறுவதற்கும், கருத்தரங்குகள் தனித்தனியாக நடத்தப் பெறுவதற்கும், பேரணி நடைபெறுவதற்கும் பொருத்தமான இடங்களாக அமையப் பெற்றுள்ளன. குறிப்பாக மாநாடு நடைபெறவுள்ள கோவை “கொடிசியா” அரங்கு மிகப் பிரமாண்டமாக உள்ளது. உலக நாடுகளிலிருந்தும், இந்தியாவின் வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் குவியவிருக்கின்ற விருந்தினர்களை தங்க வைப்பதற்கான முயற்சிகளிலே மாவட்ட ஆட்சியர் தலைமையிலே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினையொட்டி ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள பேராசிரியர் கா.சிவத்தம்பி தலைமையில், அவ்வை நடராஜன், பொற்கோ எனப்படும் பொன்.கோதண்டராமன் ஆகியோரை இணைத் தலைவர்களாகவும், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழியை செயலாளராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ம.ராஜேந்திரனை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு ஆய்வரங்க அமைப்புக்குழு உருவாக்க ஆணையிடப்பட்டு விட்டது.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எனும் தமிழறிஞர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் புலத்தின் தலைவர். அவரது தலைமையில் இந்தக் குழு சிறப்பாகச் செயல்பட்டு, உலகத் தமிழ் அறிஞர்கள் எல்லாம் முன்கூட்டியே வருகை தந்து இந்த மாநாட்டினை சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுமென்று தமிழகச் சட்டமன்றத்திலே இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நானே கடிதம் எழுதியதும், அதற்கு அந்தக் கட்சித் தலைவர்கள் வருவதற்கு ஒப்புக்கொண்டும், ஒரு சிலர் ஒப்புக்கொள்ள மறுத்தும் எழுதிய கடிதங்கள் எல்லாம் ஏடுகளிலே ஏற்கனவே வந்துள்ளன.
1995-ம் ஆண்டிற்குப் பிறகு கடந்த பதினான்கு ஆண்டுகளாக உலகின் எந்தப் பகுதியிலும் தமிழுக்கென்று ஒரு மாநாடு நடத்தப் பெறவில்லையே என்ற ஏக்கம் இந்த மாநாட்டின் மூலமாகத் தீர்க்கப்படவுள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கென சிறப்பானதோர் இலச்சினை (லோகோ) உருவாக்கப்பட்டு, அது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர் பெருமக்கள் எல்லாம் இலச்சினை அழகாகவும், அர்த்தம் பொதிந்துள்ளதாகவும் அமைந்துள்ளதாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
இலச்சினையின் பிரதான உருவமாக அய்யன் வள்ளுவரின் சிலை இடம் பெற்றிருப்பதைப் போலவே – இந்த மாநாட்டின் எடுத்துரைக்குறிப்பாக (மோட்டோவாக) “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அய்யன் வள்ளுவரின் வாசகங்களே தெரிவு செய்யப்பட்டு, அதுவும் இலச்சினையிலே இடம் பெற்றுள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி இசைவு தெரிவித்து, அதற்குள்ளாகவே 47 அறிஞர்களிடமிருந்து நமக்குக் கடிதம் வந்துள்ளது.
அவர்களில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்திலிருந்து ஜார்ஜ் ஹார்ட், இங்கிலாந்து நாட்டிலிருந்து ஆஷர், ரஷ்ய நாட்டிலிருந்து அலெக்சாண்டர் ருதுவியாஸ்கி, செக்கோஸ்லேவிகா நாட்டிலிருந்து வாச்செக், ஜெர்மனியிலிருந்து தாமஸ் மால்டன், அமெரிக்காவிலிருந்து அரங்கவாசு, ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து சு.சிறீகந்தராசா, சிங்கப்பூர் நாட்டிலிருந்து தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் ஆண்டியப்பன் என்று பட்டியல் நீண்டதாக உள்ளது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து பல கடிதங்கள் வந்திருந்த போதிலும், ஒன்றிரண்டை இந்தக் கடிதத்திலே இடம்பெறச் செய்யலாமெனக் கருதுகிறேன். ஆஸ்திரேலிய தமிழ் ஆய்வு மன்றத்தின் பொதுச் செயலாளர் சு.சிறீகந்த ராசா, சுப. வீரபாண்டியன் மூலமாக எனக்கு எழுதிய கடிதத்தில்,
“தங்கள் பேச்சுக்களைக் கேட்டுத் தமிழ் மீது பற்று வைத்ததுடன், தங்கள் எழுத்துக்களைப் படித்துத் தமிழ் மொழியை எழுதப் பழகிய லட்சோபலட்சம் தமிழ் மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்கின்ற ஆஸ்திரேலியா கண்டத்தில் இருந்து இக்கடிதத்தினை தங்களுக்கு அன்புடனும் பணிவுடனும் அனுப்புகின்றோம்.
தமிழ் இனத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழாகவே வாழ்கின்ற தாங்கள் அடுத்த வருடம் ஜுன் மாதத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ள செம்மொழி மாநாடு பற்றிய செய்திகளை அறிந்தோம், மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்த நாட்டில் வாழ்கின்ற எம்மைப் போன்றவர்களும், மேலும் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட தமிழர்களும் இணைந்து ஆஸ்திரேலிய தமிழ் ஆய்வு மன்றம் என்கின்ற அமைப்பை நடத்தி வருகின்றோம்.
தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், பல்துறைப் பேராசிரியர்கள் ஆகிய பலர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். தாங்கள் நடத்தவுள்ள செம்மொழி மாநாட்டில் பேச்சாளர்களாக வருவதற்கும், ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதற்கும், பார்வையாளர்களாகக் கலந்து கொள்வதற்கும் எங்களில் சிலர் ஆர்வமாக இருக்கின்றோம். எனவே அத்தகைய வாய்ப்புகளை எமக்கு அளிக்குமாறு அன்புடனும் பணிவுடனும் வேண்டி நிற்கின்றோம்.”
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் நா.ஆண்டியப்பன் 26-10-2009 அன்று எழுதிய கடிதத்தில்,
“கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் எனும் அறிவிப்பினை வரவேற்று 19-10-2009ல் நடைபெற்ற எங்கள் செயலவைக் கூட்டத்தில் தங்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு சிங்கப்பூர் பேராளராகவும், தொடர்பாளராகவும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தை நியமிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கிருந்து பேராளர்களைத் திரட்டி வந்து மாநாட்டில் கலந்து கொள்வதற்கும், மாநாட்டுப் பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் அது உதவியாக இருக்கும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் – இதை மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவினர் கவனிப்பார்கள் என்று நம்புகின்றேன். நானுந்தான்!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாட்டினை உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்துடன் இணைந்து நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் “தமிழ்நெட் 1999” என்ற தலைப்பில் உலகத் தமிழ் இணைய கருத்தரங்க மாநாட்டினை 1999-ம் ஆண்டு பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் முரசொலி மாறன் முயற்சியோடு சென்னையில் நடைபெற்றதற்குப் பிறகு மீண்டும் ஒரு வாய்ப்பு இந்த மாநாட்டினையொட்டி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடைபெறும் கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் ஆகியவற்றில் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழ்த் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுநர்களும் கணினித் தமிழ் அறிஞர்களும் பங்கு பெறுவார்கள்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும், பல்வேறு துறைகளின் பணிகளை ஒருங்கிணைக்கவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தலைமையில் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டமும் நடைபெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக மாநாட்டுப் பணிகளையெல்லாம் ஒருங்கிணைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கா.அலாவுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாநாட்டின் நீங்காத நினைவாக கோவை மாநகரத்தின் மையப் பகுதியில் உலகத் தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான ஒரு தாவரவியல் பூங்கா ஒன்றினை அமைக்கவும் முடிவுசெய்து, அங்கே தாவரங்கள், பூச்செடிகள், செடிகொடிகள் மற்றும் மரங்கள் போன்றவற்றைக் கொண்டு அழகுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டினையொட்டி இன்னும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்படுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்றைய தினம் மேலும் மூன்று குழுக்களுக்கான அறிவிப்புகள் ஏடுகளிலே வெளிவந்துள்ளன. அதுபற்றியெல்லாம் தொடர்ந்து அவ்வப்போது எழுதுகின்றேன்.
எல்லா வகையிலும் ஒல்காப் புகழ்கொண்டு விளங்கிட இருக்கும் கோவை மாநாடு; உலகத் தமிழ் ஆர்வலர், அறிஞர் அனைவர்க்கும் குளிர் தருவென தரு நிழலென அமையப் போகிறது என்பது மட்டும் உறுதி என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply