சுற்றுலா விசாவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டவருக்கு எதிராக நடவடிக்கை
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடின் தேசிய தொழிற்றுறையினர் பாதிக்கப்படுவார்கள். காலி மாவட்டத்தில் உக்ரேன், ரஷ்யா நாட்டு பிரஜைகள் முறையற்ற தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என சிறு மற்றும் நடுத்தர சுற்றுலா கைத்தொழில் ஒன்றியத்தின் தலைவர் சமீர சேனக டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, சுற்றுலா விசா ஊடாக இலங்கைக்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முறையற்ற தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக தெற்கு மாகாணத்தில் காலி மாவட்டம் சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகள் பல வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களினால் அரசாங்கத்துக்கு எவ்வித வருமானமும் கிடைப்பதில்லை.
காலி உனவட்டுன பகுதியில் சுற்றுலா விசா முறையில் வருகை தந்துள்ள ரஷ்யா மற்றும் உக்ரேன் நாட்டு பிரஜைகள் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக சுற்றுலா சேவை கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கும், தேசிய தொழிற்றுறையினருக்கும் முரண்பாடுகள் தோற்றம் பெறுவது தற்போது வழமையாகிவிட்டது.
உனவட்டுன பகுதியில் ரஷ்யா, உக்ரேன் நாட்டு பிரஜைகள் சுற்றுலா சேவை கைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கையர் மீது தாக்குலை நடத்தியுள்ளார்கள்.
இவ்விடயம் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலா பயணிகள் இலங்கையில் சுற்றுலா கைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டால் தேசிய தொழிற்றுறையினர் பாதிக்கப்படுவார்கள்.
ஒருசில சுற்றுலா பயணிகள் இலங்கையில் நிலங்களை மாற்று வழிமுறைகளில் கொள்வனவு செய்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் மாறுப்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தும். ஆகவே இவ்விடயம் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply