பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட கலந்துரையாடல்

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளில் 60 இற்கும் அதிகமானோர் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு கட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளில் போட்டியிட்டு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து கட்சி மட்டத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் கடந்த காலங்களில் மாகாண சபை முதலமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டவரைவு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில் ,சட்ட வரைவினை விடயதானத்துக்கு பொறுப்பான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் இந்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் நடத்துவது அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில் குறித்த திருத்தச் சட்டமூலத்தை வெகுவிரைவாக நிறைவேற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தியதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் சட்ட சிக்கலால் தேர்தலை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு எதிர்வரும் காலப்பகுதியில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply