வாள்வெட்டு குழுக்கள் மற்றும் மணல் மாபியாக்கள் என்பவற்றின் பின்னணியில் இயக்குவது தமிழ் அரசியல் தலைமைகளா?

கடந்த இரு வாரங்களில் தாயகத்தில் அதிகம் பேசப்பட்ட இரு விடயங்கள் ஒன்று வாள்வெட்டு கும்பல்களின் அடாவடித்தனம் . மற்றொன்று சட்டவிரோத மணல் கடத்தல் . பட்டப் பகலில் வீதியில இறங்கி ஒரு நபரை வெட்டும் அளவிற்கு தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள் ? இதில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் வேறு இடம்பெற்றுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் மூழ்கியுள்ளனர். தனிமையில் செல்வதற்கே அஞ்சுகின்ற நிலைமை இன்று உருவாகியுள்ளது. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று தங்களின் 10 ஆண்டு நிறைவை பொது இடத்தில் கேக் வெட்டி கொண்டாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வன்முறை கும்பலுக்கு இந்தளவிற்கு தைரியம் எவர் கொடுத்தார் ?

சில சமயங்களில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்கள் இடம்பெறுகின்ற நிலையில் அவ்விடத்தில் நாம் இருந்தால் நாமும் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் தங்களின் தேவைகளுக்காக கூட வெளியில் செல்ல முடியாது மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த ஆபத்தான குழுக்கள் எங்கிருந்து உருவாகின்றன. இவர்கள் பயமின்றி பொது இடங்களில் இவ்வாறான துணிகர சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் எனில் இவர்களுக்கு இத்தைரியத்தை கொடுப்பவர்கள் யார்?

மறுபக்கம் கடந்த வாரம் முழுவதுமாக பேசப்பட்ட விடயம் என்றால் ஆங்காங்கே இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வு விடயங்கள். எத்தனையோ இடங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெற்று கனரக வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்ட வேளையில் பொலிஸாராலும் அதிரடிப்படையினராலும் மடக்கிப் பிடிக்கப்பட்டன.

இது கடந்த வாரம் மட்டுமல்ல கடந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே இச்சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சுரண்டுவதால் இது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும். கடும் மழை காலங்களில் இதன் விளைவை நாம் கண்டிப்பாக எதிர் நோக்க வேண்டி ஏற்படும். இவ்விரு விடயங்களையும் வெறுமனே ஒரு செய்தியாக நாம் கடந்து விட முடியாது.இது எதிர்காலத்தில் பாரிய ஆபத்தை உருவாக்கக் கூடியது. இவ்விரு விடயங்கள் தொடர்பாகவும் சற்று ஆராய்ந்து பார்த்ததில் இக்குற்ற செயல்களுக்கு பின்னணியில் அரசியல் ஆதரவு இருப்பதாக தெரிய வருகின்றது. ஒரு சில பணக்கார முதலைகளும் முக்கிய தமிழ் அரசியல்வாதிகளுடன் இணைந்து இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆவா குழுக்கள் பல அரசியல் பின்னணியில் இயங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் இதன் பின்னணியிலே தற்போது இடம்பெறும் இந்த வாள்வெட்டு கும்பல்களின் அடாவடித்தனமும் மணல் மாபியாக்களின் செயற்பாடுகளும் தமிழ் அரசியல்வாதிகளின் பின்னணியில்தான் இடம்பெறுகின்றன என்பதை ஒரு சிலர் உறுதிப்படவே தெரிவித்து வருகின்றனர். இவற்றுக்கு எதிராக மக்களால் குரல் கொடுக்க முடியாமல் உள்ளது. ஏனெனில் இவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் பட்சத்தில் அது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எனும் அச்சமே ஆகும்.

எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசுவதற்காகவே எமக்கு அரசியல் தலைமைகள் தேவை. அதனை விடுத்து தங்களின் இலாபத்திற்காக இவ்வாறு இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதற்காகவும் அப்பாவி உயிர்களை வதைக்கும் வாள்வட்டு குழுக்களுக்கு ஆதரவு வழங்கவும் உங்களை மக்கள் தெரிவு செய்யவில்லை. இப்படியான அரசியல்வாதிகளிடம் தான் எமது தாயகத்தை தாரைவார்த்துள்ளளோம் என்பதை நினைக்கும் போது மிகுந்த வேதனையாக உள்ளது. நாடாளுமன்றத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ளும் இவர்களின் பின்னணியில் இத்தனை மறைமுக சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. இவற்றிற்கு எதிராக எந்த ஒரு தமிழ் அரசியல் தலைமையும் இதுவரை பேசவில்லை என்பதும் சந்தேகத்தை உறுதி செய்வதாக அமைகின்றது. இவர்கள் எம்மை ஆள்வதற்கு தகுதியானவர்களா ? உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வாள்வெட்டுக் குழுக்களுக்கு பின்னணியில் இயங்கும் அரசியல் தலைமைகள் தான் எமது தாயகத்தின் நாளைய காவலர்களா?

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply