மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி : இருவர் படுகாயம்
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம்(16.01) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதன் போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் படுகாயமடைந்த இரு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சவேரியன் அருள் வயது-(61) மற்றும் செல்வக்குமார் யூட்வயது-(42) என தெரிய வந்துள்ளது.படுகாயம் அடைந்த ஆனொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இருவரும்,காயமடைந்த ஆண் ஒருவரும் இன்றைய தினம் வியாழக்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற இருந்த வழக்கு விசாரணைகளுக்காக வருகை தந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்தவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக தெரிய வருகிறது. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை படுகொலையை தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் இவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply