வவுனியாவில் நாள் கணக்கில் காத்துநிற்கும் யாழ் பயணிகள்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான பயண அனுமதியை பெறுவதற்காக கடந்த சில நாள்களாக சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் வவுனியாவிலுள்ள ஈரப் பெரிய குளம் சோதனைச் சாவடியில் தவமிருக்க வேண்டிய பரிதாப நிலை காணப்படுகிறது.

பயணிகள் அதிகாலை ஒரு மணிக்கு முன்பே சோதனைச் சாவடிக்குச் சென்று வரிசையில் நிற்கவேண்டிய நிலை காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து தமது உறவினர்களைச் சந்திக்க மற்றும் ஏனைய தேவைகள் காரணமாக, அதுவும் தற்பொழுது பாடசாலை விடுமுறை ஆதலால் அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலர் குடும்பமாக வெளி மாவட்டங்களுக்குச் சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் செல்வதற்கு இவ்வாறு கால் கடுக்கக் காத்திருக்கிறார்கள்.

வவுனியாவில் கடும் மழை பெய்து வருகிறது. அதன் மத்தியிலும் பயணிகள் பிற்பகல் வரை மழையிலேயே நனைய வேண்டிய நிலையும் காணப்படுகிறது. அவர்கள் தங்குவதற்கு, ஒதுங்குவதற்கென இடவசதி கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. மழைபெய்யும் பொழுதும் ஒதுங்க இடமில்லாத நிலையும், வரிசையை விட்டு நீங்கினால் அந்த இடத்தை ஏனையவர்கள் ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்பதால் தொடர்ந்தும் வரிசையில் நிற்கவேண்டியேற்படலாம் என்பதனால் மழையில் நனைந்த வண்ணம் காத்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சேறும் சகதியுமான இடத்தில் நீண்ட நேரம் காத் திருப்பதால் பலருக்கு நீர்ச்சிரங்குத் தொற்று நோய் ஏற்பட்டு கால் கடுக்க நிற் பதைக் காணமுடிகிறது.

அவர்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்றாலும் அவர்களுக்குப் பயண அனுமதி வழங்குவதற்குக் காலை 7 மணிக்குப் பின்பே படைத்தரப்பினர் வருகை தருவதாகவும், ஒரு இராணுவ வீரர் மட்டுமே கடமையிலிருந்து அவர்களது உடைமைகளைச் சோதனை செய்து பின்னர் உள்ளே செல்ல அனுமதிப்பதாக வும் தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயண அனுமதிச் சீட்டுப்பெற விருப்பதனால் வரிசையில் ஒழுங்காக நிற்குமாறு கூறி இராணுவத்தினரால் பத்துவயதுக் குழந்தைகள் தொடக்கம் வயோதிபர் வரை தடி, கொட்டன்,செயின் என்பவற்றினால் கண்மூடித்தனமாகத் தாக்கப்படுகின்றமையும் சர்வசாதாரணமாக நிகழ்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.
யாழ்ப்பாணம் செல்வதற்கு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் இந்த அவலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாதவர்களாக அசிரத்தை காட்டுவதாக கால்கடுக்கக் காத்திருக்கும் பயணிகள் விசனம் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply