ஏ-9 வீதியூடான பிரயாணத்தை மேலும் இலகுவாக்க வேண்டும்
யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவ அனுமதி பெற்று வந்தவர்கள் மட்டுமே வவுனியாவில் இருந்து கண்டி-யாழ் ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு பஸ்களில் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்பட்ட நடைமுறை கடந்த மாதம் நடுப்பகுதியில் தளர்த்தப்பட்டு, நாட்டின் எப்பகுதியிலிருந்தும் யாழ்ப்பாணம் செல்பவர்கள் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் தமது அடையாள அட்டையின் போட்டோ பிரதி ஒன்றைக் கொடுத்து, அதில் இராணுவ அதிகாரியின் கையெழுத்து முத்திரையைப் பதித்துக் கொண்டு பிரயாணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த ஏற்பாடு யாழ்-கண்டி வீதியூடான பிரயாணங்களில் உள்ள கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்தியுள்ளதை நாம் முழுமையாக வரவேற்பதோடு ஏ-9 ஊடாக பொதுமக்களின் பிரயாணத்தை மேலும் இலகுவாக்க புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துமாறு சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீ-ரெலோ) சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வினயமாக கோருவதுடன் பொதுமக்கள் சார்பில் சில ஆலோசனைகளையும் முன்மொழிகின்றது.
யாழ் குடாநாட்டுக்குச் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் கிட்டத்தட்ட தினம் 4000 பொது மக்கள் பஸ் பயணத்துக்காக வவுனியாவில் காத்திருப்பதாக தெரிகிறது. ஏ-9 வீதி திறந்ததன் பின்னர் யாழ் குடாநாட்டுக்கான பயணத்துக்கு செலவாகும் தொகை கணிசமாக குறைந்துள்ளதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் அதிகளவான பிரயாணிகளின் தொகை சில முறைகேடுகளை உருவாக்கியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஆகவே, ஏ-9 வீதி ஊடாக பகல் வேளையிலேனும் குறிப்பிட்ட நேரம் வரை தனியார் வாகனங்கள் போக்குவரத்துச் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.
ஆரம்பத்தில் பரீட்சாத்தமாக வாரத்தில் சில நாட்கள் பொது மக்கள் தமது சொந்த வாகனங்களில் ஏ-9 ஊடாக பயணம் செய்ய அனுமதி அளித்து புதிய சூழலை மதிப்பீடு செய்து யாழ் – கண்டி ஏ-9 வீதியூடான பிரயாணத்தை மேலும் இலகுவாக்க புதிய வழிமுறைகளை நிரந்தரமாக அறிமுகப்படுத்த முடியும்.
ப. உதயராசா
செயலளார் நாயகம்
சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீ-ரெலோ)
16 டிசம்பர், 2009
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply