இலங்கையிலிருந்து 3 அரசசார்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு பணிப்பு
இலங்கையில் செயற்பட்டுவரும் மூன்று சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிக்கப்படவிருப்பதாக அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்தார். நோர்வேயைத் தளமாகக் கொண்டியங்கும் நோர்வேஜியன் மக்கள் அமைப்பு (Norwegian Pepples’s Aid) போஃர்ட் (FORUT) நெதர்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் சோஆ (ZOA) ஆகிய சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களே இவ்வாறு பணிக்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. இந்த நிறுவனங்கள் வழங்கப்பட்ட ஒழுங்கு முறைக்கு அமையச் செயற்படவில்லையெனவும், சரியான செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்க வில்லையெனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
“இந்த நிறுவனங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவை சரியான முறையில் செயற்பாடுகளை முன்னெடுக்கப்படவில்லையென்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இலங்;கையில் அவர்களின் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு வெளியேறுமாறு பணிக்கப்படவுள்ளனர்” என அரசாங்க அதிகாரி தெரிவித்தார்.
வன்னியிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் வெளியேறிய இந்த அரசசார்பற்ற அமைப்புக்கள் தற்பொழுது வவுனியாவிலிருந்து இயங்கி வருவவதாகக் குறிப்பிட்ட அந்த அதிகாரி, இவை தற்பொழுது எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்லையெனக் கூறினார்.
இந்த நிறுவனங்களில் ஒரு நிறுவனமாவது விடுதலைப் புலிகளுக்குச் சார்பாகச் செயற்பட்டது என்பதற்கான ஆதராங்கள் இருப்பதாகவும், நிறுவனங்களின் இயந்திரங்கள் விடுதலைப் புலிகள் பதுங்குகுழிகளை அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி குற்றஞ்சாட்டினார்.
“வன்னியிலிருந்து வெளியேறிய அரசசார்பற்ற நிறுவனங்கள் 12 வவுனியாவிலிருந்து செயற்படுகின்றன. இதில் பல அமைப்புக்கள் வடக்கிற்கும் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றன” என்றார் அந்த அரசாங்க அதிகாரி.
எனினும், அரசசார்பற்ற நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படவுள்ளமை குறித்து தமக்கு எந்தத் தகவலும் தெரியாதென அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் பிரதிப் பணிப்பாளர் எவ்.ஹாசிம் தெரிவித்தார்.
வன்னியில் செயற்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார். மீட்கப்பட்ட பகுதிகளில் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையெனக் கூறியே அவர் விசாரணைகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply