‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீதான மீள்வாக்கெடுப்பு என்பது கொட்டைப் பாக்கு அளவுக்குக் கூட பெறுமதி அற்றது: புதினப்பார்வை
இலங்கைத் தமிழ்ச் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றது.
இந்தக் குழப்பத்தின் உச்சமாக இப்போது தேர்தல்கள் விளங்குகின்றன.
சிறிலங்காவுக்கான அரச அதிபர் தேர்தலில் தமிழர்கள் என்ன செய்வது என்ற சிக்கலை இப்போதைக்கு ஒர் ஓரத்தில் வைத்துவிடுவோம்.
இலங்கைத் தீவி்ற்கு வெளியே – நாடு நாடாக – இப்போது ‘வட்டுக்கோட்டைத் தீ்ர்மானம்’ மீதான மீள் வாக்குப் பதிவு ஆரவாரத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ என்பது – தமிழ் மக்களின் தேசியத் தன்மையையும், தாயகக் கோட்பாட்டினையும், தன்னாட்சி உரிமையையும் அங்கீகரித்து – ஏற்றுக்கொண்டு – தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவர்கள் தமக்குள் எடுத்த ஒரு தீ்ர்மானம்.
1976 இல் அரசியல் தலைவர்களால் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் – அதற்கு முன்னைய 28 ஆண்டு கால சிங்கள அடக்கு முறையின் விளைவாக – தமது அரசியல் அவா என்ன என்பதைத் தமிழர்கள் தமக்குள் தீர்மானித்த ஒரு வரலாற்று நிகழ்வு.
அந்தத் தீர்மானத்தின் அடிப்படைகளான – தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் ஒட்டுமொத்தமான வடிவமாகவே ‘தமிழீழம்’ என்ற கருத்துரு பிறப்பெடுத்தது.
தமது அரசியல் தலைவர்களால் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தினைத் தாமும் அங்கீகரிப்பதாக 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள் – அந்தத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒர் ஆணையை அந்தத் தேர்தலில் வழங்கியிருந்தனர்.
அந்த ஆணை தான் ‘தமிழீழம்’ நோக்கிய போராட்டம்.
அந்த வரலாற்று ஆணை – அகவயப்பட்டதாக – இயல்பானதாக கடந்த 30 வருடங்களாக எமது இனத்தின் அரசியலுக்குள் ஊறிப்போய் உள்ளது.
கடந்த 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம், நாம் சந்தித்த அழிவுகள், செய்த தியாகங்கள், கொடுத்த விலைகள், இழந்து போன 100,000-ற்கும் மேற்பட்ட உயிர்கள் – எல்லாமே – 30 ஆண்டுகளுக்கு முன்னைய அந்த ‘மக்கள் ஆணை’க்கு உரமூட்டின.
இவ்வளவு ஆழிவுக்கும் பின்பு – ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீது மீள்வாக்குப் பதிவு செய்வது என்பது – அவ்வளவு தியாகங்களையும் அவமதிப்பது போன்றது; 30 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தந்துவிட்ட அந்த அரசியல் ஆணையைச் சிறுமைப்படுத்துவது போன்றது.
அவ்வளவு தியாகங்களுக்கும் அடிப்படையான அந்த ஆணையை மறு-கேள்விக்கு உள்ளாக்குவது என்பது, அவ்வளவு தியாகங்களையுமே கேள்விக்கு உள்ளாக்குவது போன்றது.
அதிலும் – 99 வீதம் பேர் மட்டுமே “ஆம்” என வாக்களித்தார்கள் எனச் சொல்லுவது அவ்வளவு தியாகங்களையும் இழிவுபடுத்துவது போன்றது.
‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீது இப்போது மீள்வாக்குப் பதிவு செய்வது என்பது, “தமிமீழம்” என்பது இவ்வளவு காலமும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோரிக்கையாக மட்டுமே இருந்தது என்று இந்த உலகம் சொல்லுவதை தமிழர்களாகிய நாமும் ஏற்றுக்கொள்ளுவது போன்றது.
‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீது இப்போது மீள்வாக்குப் பதிவு செய்வது என்பது – அந்தத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்ட ‘தமிழீழம்’ என்ற இலட்சியத்திற்காகப் போராடிய – விடுதலைப் புலிகளை எமது ஏக பிரதிநிதிகள் என்று கூறி உலக வீதிகளில் இறங்கி நாம் நடத்திய போராட்டங்கள் எல்லாவற்றையும் நாமே கொச்சைப்படுத்துவது போன்றது.
2009 மே மாதத்திற்கு முன்னால் இந்த மீள்வாக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அது வேறு கதை:
விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இலக்கான ‘தமிழீழம்’ எனப்படுவது தான் தமிழ் மக்களின் அரசியல் அவாவும் கூட என்பதை இந்த உலகிற்கு வலியுறுத்த அது உதவியிருக்கலாம்.
அத்தோடு – விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்; ‘தமிழீழம்’ எனப்படுவது ஒர் அரசியலற்ற கோட்பாடு அல்ல; அது ஆயுத ஆளுமைக்கு முன்னானது போன்றவற்றை இந்த உலகிற்கு நிரூபிப்பதற்கும் துணை புரிந்திருக்கலாம்.
அந்த வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கூட அழிவிலிருந்து காப்பாற்றி – தமிழர்களுக்கான தலைமையையும் தக்கவைத்துக்கொள்ள அது உதவியிருக்கலாம்.
ஆனால் – இப்போது கதை வேறு; ஆயுத ஆளுமை முடிவுக்கு வந்துவிட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவோடு – தமிழர்களின் அரசியல் கோரிக்கை மீது படிந்திருந்த அவர்கள் கூறும் ‘பயங்கரவாதச் சாயமும்’ கரைய ஆரம்பித்துவிட்டது.
ஆதலால் – ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீதான மீள்வாக்கெடுப்பு என்பது இப்போது அவசியமற்றது; பயனற்றது.
‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ என்பது தமிழ் தேசிய இனம் தனது ஆன்மாவில் வரித்துக்கொண்டுள்ள ஒரு வாழ்வு நெறி; அது எப்போதுமே உயிர்ப்புடன் இருக்கின்றது. அதற்கு மீள உயிர் அளிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.
இந்த வாக்கெடுப்பு என்பது உயிர்கள் காற்றைச் சுவாசிக்கின்றனவா இல்லையா என வாக்கெடுப்பு நடாத்துவது போன்றது.
இன்னொரு பக்கத்தில் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீதான இந்த மீ்ள் வாக்கெடுப்பை – நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியுடன் சிலர் குழப்பப் பார்க்கின்றார்கள்.
‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீதான மீள் வாக்கெடுப்பு எனப்படுவது ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைக்கும் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் என்றும் கற்பிதம் செய்யப்படுகின்றது.
ஆனால் – உண்மையில், சில தனிப்பட்ட ஆட்கள் இந்த இரண்டு முயற்சிகளிலும் தொடர்புபட்டுள்ளார்கள் என்பதைத் தவிர – நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கும் முயற்சிக்கும் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீதான மீள்வாக்குப் பதிவுக்கும் கோட்பாட்டு ரீதியான எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
நாடு கடந்த தமிழீழ அரசு எனப்படுவது அனைத்துலக சமூகத்ததின் அங்கீகாரத்தைப் பெறும் நோக்கத்தைக் கொண்ட ஒரு முயற்சி.
சிறிலங்கா என்ற நாட்டை இரண்டாகப் பிரிப்பது என்பதோ, அல்லது இலங்கைத் தீவில் இன்னொரு நாட்டை உருவாக்குவது என்பதோ நாடு கடந்த அரசு உருவாக்கும் செயற்குழுவின் நோக்கம் அல்ல.
அந்த நோக்கங்களோடு இந்த முயற்சியை எடுத்தால் உலக அங்கீகாரத்தைப் பெறவும் முடியாது.
இது வேறு; அது வேறு.
‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ இலங்கைத் தீவிற்கு உள்ளே வாழும் தமி்ழ் தேசிய இனம் தொடர்பானது; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனப்படுவது ஒரு “நாடு கடந்த” ( இலங்கைத் தீவு கடந்த) அரசாங்கம் தொடர்பிலானது. இது வேறு; அது வேறு.
உண்மையில் – ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்’தை நாடு கடந்த தமிழீழ அரசுடன் தொடர்புபடுத்துவது – உபத்திரவமாக அமையுமே அல்லாமல் உதவிகள் புரியாது.
இன்னொரு பக்கத்தில் – ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீதான இந்த மீள் வாக்கெடுப்பு எமது போராட்டத்திற்கு அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுத்தரப் போகின்றது என்ற ஒரு பிரமையும் பரவவிடப்படுகின்றது.
உண்மை என்னவென்றால் – இந்த உலகத்தில் எவருக்குமே – அது அமெரிக்காவாய் இருந்தால் என்ன, ஜரோப்பிய ஒன்றியமாய் இருந்தால் என்ன, இந்தியாவாய் இருந்தால் என்ன – எவருக்குமே இந்த வாக்கெடுப்பில் எந்த அக்கறையும் இல்லை.
அவர்கள் இதனை ஒரு பொருட்டாக மதிக்கப்போவதும் இல்லை.
இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் என்ன விதமாக வந்தாலும் – இந்தப் பெரிய வல்லரசுகளின் இலங்கைத் தீவு மீதான கொள்கையில் அது எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதும் இல்லை.
ஒட்டுமொத்தத்தில் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீதான மீள்வாக்கெடுப்பு என்பது –
1) கொட்டைப் பாக்கு அளவுக்குக் கூட பெறுமதி அற்றது.
2) எமது முகத்தில் நாமே பூசும் கரி.
3) தமிழினம் தனக்குத் தானே இழைக்கும் ஒரு வரலாற்று அவமானம்.
புதினப்பார்வை, டிசம்பர் 18, 2009
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply