சிவாஜிலிங்கத்தின் வருகைக்கு தமிழரசுக் கட்சியினர் வெளிநடப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கும் இடையே குழப்பமும் பிளவும் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தந்தை செல்வாவின் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடந்தது. அப்போது தந்தை செல்வா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக எம்.கே. சிவாஜிலிங்கம் அந்நிகழ்வில் பிரசன்னமானதும் தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் யாவரும் வெளிநடப்பு செய்தனர். சிவாஜிலிங்கம் தனிய நின்றே மாலையை அணிவித்தார் என்று தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது.
சிவாஜிலிங்கம் மாலை அணிவித்தபின் அவ்விடத்தைவிட்டு வெளியேறி பின்னரே பிற தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சென்று தமது மரியாதையைச் செலுத்தியுள்ளனர். தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவையொட்டி தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை.
நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் யாழ். கிளையின் முக்கிய உறுப்பினர்களான சிவஞானம் மற்றும் குலநாயகம் ஆகியோர் நூற்றுக்கணக்கான கட்சி உறுப்பினர்களுடன் நிகழ்வில் பங்குபற்றினர். ஆனால் சிவாஜிலிங்கம் வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாலேயே இவர்களுக்கிடையே இவ்வாறு பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply