தேஷபந்து தென்னகோனை பாெலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பிரேரணையை விமர்சித்த விஜயதாச ராஜபகஷ்

தேஷபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பதவி அனுமதிக்கப்பட்டதல்ல என உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவொன்றை வழங்கியுள்ள நிலையில் தேஷபந்து தென்னகோனை பாெலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டமை பாராளுமன்ற அதிகாரத்தை மலினப்படுத்துவதாகும் என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபகஷ் தெரிவித்தார்.

தேஷபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு சபாநாயகருக்கு கையளித்திருக்கும் பிரேரணையின் சட்ட நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (30) காெழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி தேஷபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்தார். அவ்வாறு நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதியை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. என்றாலும் அவரின் நியமனம் செல்லுபடியற்றது என தெரிவித்து உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை வழங்கி இருக்கிறது.அந்த உத்தவுக்கமை தேஷபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் அல்ல. ஏனெனில் உயர்நீ திமன்ற உத்தரவு இன்னும் செயற்பாட்டில் இருக்கிறது.

உயர் நீதிமன்ற உத்தரவு அவ்வாறு இருக்கையில், தேஷபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு பிரேரணை ஒன்றை கையளித்திருக்கின்றனர். 2002ஆம் ஆண்டு 5ஆம் இலக்க சட்டத்தின் கீழ் அவ்வாறானதொரு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க முடியுமாக இருப்பது, தற்போது பதவியில் இருக்கும் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக மாத்திரமாகும்.

அதன் பிரகாரம் தேஷபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் அல்ல என உயர் நீதிமன்ற தீர்ப்பொன்று இருக்கும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். இது முற்றாக அரசியலமைப்புக்கும் 2002ஆம் ஆண்டு 5ஆம் இலக்க உயர் அதிகாரிகளை பதவி நீக்கும் சட்டத்தின் கீழ் ஏற்பாடுகளுக்கும் முரணாகும்.

ஒருவேளை, அவருக்கு எதிராக இருக்கும் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தவேண்டி ஏற்பட்டால், அதற்காக நியமிக்கப்படும் குழுவின் தலைவராக இருக்க வேண்டி இருப்பது உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவராகும். அப்போது தேஷபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் அல்ல என உயர் நீதிமன்றமே உத்தரவொன்றை வழங்கியுள்ள நிலையில், மறுபக்கம் அவரை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கவேண்டுமா என விசாரணை நடத்தப்படுவது முரண்பாடான நிலையை தோற்றுவிக்கிறது.

எனவே இது பாராளுமன்றத்தின், குறிப்பாக சபாநாயகரினால் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை கணிசமான அளவில் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயலாகும். சட்ட ரீதியான அதிகாம் இல்லாத ஒன்றையே இவர்கள் மேற்கொள்ளப்போகிறார்கள் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply