கடந்த வருடம் மாத்திரம் 9200 காசநோயாளர்கள் சுகாதார அமைச்சின் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி

நாட்டில் கடந்த வருடம் மாத்திரம் சுமார் 9200 காசநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 250 பேர் சிறுவர் காசநோயாளர்கள் என சுகாதார அமைச்சின் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சின் பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமையில் அண்மையில் விசேட நடைபவணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது சுகாதார அமைச்சின் பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

தொற்றுநோய்களை கருத்திற்கொண்டு நோக்கும் போது, உலகளவில் அதிக மரணங்கள் சம்பவிக்கும் பற்றீரியா தொற்றாக காசநோய் உள்ளது. நோய் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் இந்நாடு மிகப்பெரிய சுகாதார பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடுவதுடன், பாரிய செலவுகளும் ஏற்படலாம். அத்தோடு பொதுமக்களின் ஆரோக்கியம் சீர்குலைவதால் முழு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படலாம். ஆகையால் இவ்வருடத்துக்கான தொனிப்பொருள் பிரதான மூன்று விடங்களை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

அர்ப்பணிப்பு என்ற வார்த்தையைப் பொறுத்தவரை, கொள்கைகளை உருவாக்குதல், கட்டளைகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நிதி பங்களிப்புகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்களில் அரசியல்வாதிகளாகிய தனக்கும் தனது குழுவினருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. இரண்டாவது விடயம் முதலீடு, இதில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இரண்டும் முதலீடு செய்கின்றன. சேவைகளை வழங்குதல், விஞ்ஞான ரீதியாக நோயாளிகளை அடையாளம் காணுதல், நோய்களைக் கண்டறிதல், அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் மற்றும் விளைவுகளை அவதானித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே மூன்றாவது அம்சமாகும்.

காசநோய்க்காக வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் மிகவும் விலை உயர்ந்தனவையாகும். 2035 ஆம் ஆண்டிற்கும் நாட்டில் இனங்காணப்படும் காசநோயாளிகளின் எண்ணிக்கையை 90 சதவீதமாகவும், காசநோயால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 95 சதவீதமாகவும் குறைப்பதே சுகாதார அமைச்சின் முதன்மையான நோக்கமாகும். 2024 ஆம் ஆண்டு மாத்திரம் நாட்டில் 9,200 காசநோய் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 5,291 ஆண் நோயாளிகளும் 3,259 பெண் நோயாளிகளும் உள்ளனர். கடந்த ஆண்டு நாட்டில் பதிவான சிறுவர் காசநோயாளிகளின் எண்ணிக்கை 250 ஆகும்.

கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான காசநோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார தரவுகள் தெரிவிக்கின்றன. இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் இருமல், காய்ச்சல், எடை குறைவு, பசியின்மை, இரவில் வியர்த்தல், அதிக சோர்வு, இருமும்போது மார்பு வலி, சளியுடன் இரத்தம் வெளியேறுதல் ஆகியவை காசநோயின் அறிகுறிகளாகும். முறையான சிகிச்சை மூலம் காசநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply