ரணிலின் ஊழல் ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுத்தால் நாங்கள் எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் : பந்துல குணவர்த்தன
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாரித்திருந்த ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் அரசாங்கத்துக்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம். அதேநேரம் நாணய நிதியத்துக்கு வாக்குறுதி அளித்துள்ள விடயங்களை விரைவாக மேற்கொள்ளாவிட்டால் 5ஆவது கடன் தவணையை எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போகுமென முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நாடு சுதந்திரமடைந்த பின்னர் முற்றாக பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை, கட்டியெழுப்பவும் மீண்டும் அவ்வாறானதொரு நிலை நாட்டில் ஏற்படாமல் இருப்பதற்கும் நாட்டு மக்களின் பொருளாதார நிலைமையை கட்டியெழுப்புவதற்கு தேவையான தேசிய செயற்றிட்டம் ஒன்றை சட்டமாக்கிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
குறிப்பாக வரலாறு முழுவதும் இருந்துவந்த ஊழல் மோசடிகளை கண்டித்து, அரச நிதி மற்றம் கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டு ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான செயற்றிட்டங்கள் மற்றும் தேவையான சட்ட திட்டங்களை தயாரித்து பாராளுமன்றத்தில் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருந்தார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்த சட்டங்கள் தொடர்பில் நான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தேன். 2028ஆம் ஆண்டாகும்போது தனிநபர் வருமானம் 20 ஆயிரம் டொலருக்கு அதிக, வறுமையற்ற, கடனற்ற, அபிவிருத்தி அடைந்த நாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தினால் பிரதான 5 சட்டமூலங்கள் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, பொருளாதார மேம்பாட்டு சட்டம், இலங்கை மத்திய வங்கி சட்டம், அரச நிதி முகாமைத்துவ சட்டம், அரச கடன் முகாமைத்துவ சட்டம் மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்டம்… இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளவே அது தொடர்பில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தேன்.
அந்த சட்டங்களில் ஒன்றுதான் ஊழல் எதிர்ப்புச் சட்டம். அதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் ரணில் விக்ரமசிங்க தலைமையில் முடிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக நான் 2024 ஜூலை மாதம் அமைச்சரவை பேச்சாளராக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தேன்.
ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் ஊழல் எதிர்ப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. அதில் பல செயற்றிட்டங்கள் அடங்கிய உள்ளடக்கங்கள் இணைக்கப்பட்டிருந்தன.
அதன் பிரகாரம், ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆசியாவிலேயே முதல் தடவையாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டது.
நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்துக்கு அமைய, எமது செயற்றிட்டங்களை நாணய நிதியம் அடிக்கடி மீளாய்வு செய்து வருகிறது. அதன் பிரகாரம், ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட விடயத்தை நாங்கள் தெரிவித்திருந்தோம்.
அத்துடன் 2025 முதல் 2029 வரையான தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பது, கணக்காய்வு சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நாணய நிதியத்துக்கு அறிவித்தபோது, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தலுக்கு பின்னர் இந்த சட்டமூலங்களை அனுமதித்து தருமாறு நாணய நிதியம் அறிவித்திருந்தது.
எனவே, ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலாவது இந்த சட்டமூலங்களை அனுமதித்துக்கொடுக்க நடவடிக்கை எடுத்தமைக்கு நாங்கள் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாரித்திருந்த ஊழல் எதிர்ப்பு திட்டத்தை முன்னெடுத்துச் சென்று இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் எமது ஒத்துழைப்பினை வழங்குவோம். அதேவேளை இந்த விடயங்களை விரைவாக மேற்கொள்ளாவிட்டால் 5ஆவது கடன் தவணையை எங்களால் பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply